Kangana Ranaut: ’50 எல்.ஐ.சி பாலிஸிக்களா!’ கங்கனாவின் சொத்து மதிப்பு குறித்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!
”Kangana Ranaut: ஷேர் மார்க்கெட்டில் 21 லட்சமும், 11 பேருக்கு தனிநபர் கடனும் வழங்கப்பட்டது. தன்னிடம் 50 எல்.ஐ.சி பாலிசிகள் உள்ளதாக கங்கனா ரனாவத் கூறி உள்ளார்”

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் தனது சொத்து மதிப்பு ரூ.91 கோடிக்கு மேல் இருப்பதாக தனது வேட்புமனுவில் தெரிவித்து உள்ளார்.
கங்கனாவின் சொத்து விவரம்
அதில் 28.7 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும். 62.9 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு 17.38 கோடி கடன் இருப்பதாகவும் லைவ் ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.
5 கோடி ரூபாய்க்கு தங்கம்
அசையும் சொத்துக்களை பொறுத்தவரை 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 காரட் வைர நகைகள் உள்ளதாக கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவில் கூறி உள்ளார்.
மும்பை பாந்தாவில் வீடு
அசையா சொத்துக்களை பொறுத்தவரை ஜிராக்பூர், சண்டிகர், மணாலி (குலு) மற்றும் மும்பையின் பாந்த்ரா ஆகிய இடங்களில் சொத்துக்கள் இருப்பதை தனது வேட்புனுவில் காட்டி உள்ளார். மணாலியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு 4.97 கோடி ரூபாய் ஆகும். மும்பை பாந்த்ராவில் உள்ள சொத்து மதிப்பு 23.98 கோடி ரூபாய் ஆகும்.
பி.எம்.டபிள்யூ சொகுசு கார்
இதுமட்டுமின்றி 3.91 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ மற்றும் இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளார்.
50 எல்.ஐ.சி பாலிசிக்கள்
மேலும் ஷேர் மார்க்கெட்டில் 21 லட்சமும், 11 பேருக்கு தனிநபர் கடனும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவரிடம் 50 எல்ஐசி பாலிசிகளும் உள்ளன.
அவரது சொத்து பற்றிய செய்தி அறிவிக்கப்பட்ட உடனேயே, பல சமூக ஊடக பயனர்கள் அதற்கு அனைத்து வகையான எதிர்வினைகளையும் கொண்டிருந்தனர். அவரது சொத்துக்களைப் பற்றி, குறிப்பாக 50 எல்ஐசி பாலிசிகளைப் பற்றி கேள்விப்பட்டு பலர் திகைத்துப் போனார்கள்.
லைவ் மிண்ட் செய்தியின்படி, மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மூன்று மற்றும் அவதூறு செய்ததற்காக நான்கு உட்பட எட்டு கிரிமினல் வழக்குகள் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கங்கனா ரணாவத் கூறி உள்ளார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதிக்கு ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
வேட்புமனுத்தாக்கல் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கங்கனா ரனாவத், "இன்று நான் மண்டி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். மண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். பாலிவுட்டில் வெற்றி பெற்றது போல் அரசியலிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு மண்டியில் கருக்கொலை சம்பவங்கள் அதிகமாக இருந்தன. இன்று, மண்டியில் இருந்து பெண்கள் இராணுவத்தில், கல்வி மற்றும் அரசியல் துறையில் உள்ளதாக கூறினார்”
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலும், மே 25ஆம் தேடி அன்று 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.
