Champai Soren: ராஜினாமா செய்கிறார் ஹேமந்த் சோரன்: ஜார்க்கண்ட் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு-யார் இவர்?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஜார்க்கண்ட் போக்குவரத்து துறை அமைச்சர் சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சாம்பை சோரன் புதிய முதல்வராக புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
"நாங்கள் சாம்பை சோரனை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம். பதவியேற்பு விழாவுக்கு ஆளுநரிடம் கோரிக்கை வைக்க நாங்கள் ராஜ் பவனுக்கு வந்தோம்" என்று ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா ராஜ் பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், “முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர்” என்றார்.
யார் இந்த சாம்பை சோரன்?
ஜார்க்கண்ட் தனி மாநிலத்திற்கான இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த சாம்பை சோரன், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சாம்பை சோரன் 7 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைவதற்கு முன் அவர் சுயேச்சை எம்எல்ஏவாக பதவி வகித்தார்.
- தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
- ஜார்க்கண்ட் புதிய மாநிலமாக பிரிய முக்கிய பங்கு வகித்தவர் சாம்பை சோரன். ஜார்க்கண்ட் டைகர் எனவும் இவரை அழைப்பர்.
நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக, ஹேமந்த் சோரன் வீட்டில் ரூ.36 லட்சம் ரொக்ம், சொகுசு காரை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடந்தி வருகிறது. ஹேமந்த் சோரன், நில மோசடி செய்து கோடிக்கணக்கான ரூபாயை பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன், நில வருவாய்த்துறை ஊழியர் பானுபிரசாத் உள்பட 14 பேரை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
தான் கைது செய்யப்பட்டால், தனது மனைவியை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று ஹேமந்த் சோரன் திட்டமிட்டு இருந்ததாக கூட தகவல்கள் வெளியாகியிருந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் ராஞ்சி நகரை விட்டு வெளியேறக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனால், ஜார்க்கண்டில் உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது.
ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜி கூறுகையில், "முதல்வர் அமலாக்கத்துறை காவலில் உள்ளார். முதல்வர் ராஜினாமாவை சமர்ப்பிக்க ED குழுவுடன் கவர்னரிடம் சென்றுள்ளார். சாம்பை சோரன் அடுத்த முதல்வர். எங்களுக்கு அவருக்கு ஆதரவு அளிக்க போதிய பலம் உள்ளது" என்றார்.
காங்கிரஸ் தலைவர் சுபோத் காந்த் சஹாய் கூறுகையில், “பாஜக ஊழல் செய்தால் அது ஊழல் இல்லையா? பாஜகவின் கொள்கை மற்றும் எண்ணம் குறித்து இனி விவாதிக்க முடியாது. கூட்டாட்சி அமைப்பை பாஜக அழித்துவிட்டது.” என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ தீபிகா பாண்டே சிங் கூறுகையில், "எங்களுக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு, எங்களை அவமானப்படுத்திவிட்டு வெளியேறுமாறு கூறினார்கள். ராஜ் பவான் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறது." என்றார்.
டாபிக்ஸ்