‘திமுகவை வீழ்த்துவது முக்கியம்.. நமது கூட்டணி செய்து முடிக்கும்’ -பிரதமர் மோடி நம்பிக்கை
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். சென்னை வந்த அவர், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

‘வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!’ என பிரதமர் நரேந்திர மோடி அதிமுக-பாஜக கூட்டணியைத் தொடர்ந்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்.
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும் என்று அந்தப் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் பேசிய அமித்ஷா, அனைவருக்கும் பங்குனி உத்தரம் நல்வாழ்த்துகள் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.
"பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளோம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியின் இதர கட்சிகள் உடன் இணைந்து சந்திப்போம். இந்த தேர்தல் தேசிய அளவில் மோடி அவர்கள் தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியும் தலைமையிலும் நடக்கும்.
1998ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி உடன் அதிமுக கூட்டணி வைத்தது. இது ஒரு இயல்பான கூட்டணி. பாஜக-அதிமுக கூட்டணி சேர்ந்து ஒருமுறை தமிழ்நாட்டில் 30 லோக் சபா இடங்களை கைப்பற்றி உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார் அமித் ஷா. மேலும், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
கேள்வி:- அதிமுக - பாஜக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையுமா?
நாங்கள் இணைந்துதான், ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி ஆட்சி நடக்கும்.
கேள்வி:- பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் ஆவார்களா?
வெற்றி பெற்ற பின் இதற்கான பதிலை தருகிறோம். எங்கள் கூட்டணியை வைத்து திமுக குழப்பம் செய்ய இடம் தர விரும்பவில்லை.
கேள்வி:- பாஜக கூட்டணியில் அதிமுக வைத்த கோரிக்கை என்ன?
அதிமுக தரப்பில் எந்த கோரிக்கையும் இல்லை, இது ஒரு இயல்பான கூட்டணி.
கேள்வி:- டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் இக்கூட்டணியில் உள்ளார்களா?
அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதில் பாஜக தலையிடப் போவதில்லை.
