Punjab: காலிஸ்தான் தலைவர் கைது எதிரொலி..இணைய சேவைகள் அதிரடி முடக்கம்!
காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் கைது எதிரொலியாக பஞ்சாபில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பதற்றத்தை தணிக்க மொபைல், இணைய சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் பன்னும் என்பவரால் சீக்கியர்களுக்கான நீதி (Sikhs for Justice) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி வருகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபை பிரிப்பதற்கான வாக்கெடுப்பை உலகின் பல பகுதிகளில் வாழும் சீக்கியர்களிடையே நடத்தி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனிடையே காலிஸ்தான் வாக்கெடுப்பின் பின்னணியில் பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் இருப்பதாக முன்னாள் காலிஸ்தான் ஆதரவு தலைவரான ஜஸ்வந்த் சிங் தகேதார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க கோரி வரும் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கடந்த 23 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து அந்த அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கத்தி, வாளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை பஞ்சாப் போலீசார் இன்று (மார்ச் 18) கைது செய்தனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் ஏற்படும் பதற்றத்தை தணிக்க 24 மணிநேரத்திற்கு மொபைல், இணைய சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு நலனுக்காக பஞ்சாபின் பிராந்திய அதிகார வரம்பில் உள்ள அனைத்து மொபைல் இணைய சேவைகள், அனைத்து எஸ்.எம்.எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் அனைத்து டாங்கிள் சேவைகள், குரல் அழைப்பு தவிர இன்று முதல் மார்ச் 19 வரை முடக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.