World Drug Day 2024: 'சமூகத்தை சீரழிக்கும் போதை வேண்டாமே'.. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஒரு பார்வை!
World Drug Day 2024: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம்.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் நபர்கள் போதைப் பொருளை உபயோகிக்கிறார்கள் என்கிறது ஐநா சபையின் அறிக்கைத் தகவல். மது, சிகரெட், பீடி மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், தற்போது கஞ்சா, ஹெராயின், அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவை இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன.
போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி 'சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் போதைப் பொருள்
உலகளாவிய ரீதியில் போதைப் பொருள் பயன்படுத்துதல், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் என்பன முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பொருளின் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெரும் கவலைக்குரியது. ஒவ்வொரு நாளும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன.