INDIA bloc: ’தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் மோதல் உள்ளது!’ போட்டு உடைத்த உமர் அப்துல்லா!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  India Bloc: ’தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் மோதல் உள்ளது!’ போட்டு உடைத்த உமர் அப்துல்லா!

INDIA bloc: ’தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் மோதல் உள்ளது!’ போட்டு உடைத்த உமர் அப்துல்லா!

Kathiravan V HT Tamil
Published Oct 31, 2023 06:33 AM IST

”வடக்கு காஷ்மீரின் குப்வாரா நகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, இந்தியா கூட்டணி சரியாக இல்லை என்றும், இந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும், கூட்டணி உறுப்பினர்கள் கருத்து வேறுபாடுகளை களைய முயற்சி எடுப்பார்கள் என்றும் கூறினார்”

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா  (HT File Photo)
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா (HT File Photo)

வடக்கு காஷ்மீரின் குப்வாரா நகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டிற்கு வந்திருந்த முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, 

இந்தியா கூட்டணி சரியாக இல்லை என்றும், இந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும், கூட்டணி உறுப்பினர்கள் கருத்து வேறுபாடுகளை களைய முயற்சி எடுப்பார்கள் என்றும் கூறினார். 

தொடந்து பேசிய அவர், "தேர்தல் நடைபெறும் நான்கு ஐந்து மாநிலங்களில் உள்ள உள் சண்டைகள் கூட்டணிக்கு நல்லதல்ல" என்றும் கூறினார். 

உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியுடன் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது.

என்ன பிரச்னை?

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து ’இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்து இருக்கின்றன.

மத்தியப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சில தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், “காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்வார்கள் என்று தெரிந்து இருந்தால் அவர்களை நம்பி இருக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் எங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் கூறி இருந்தது. மத்திய பிரதேச தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி இல்லை என்று எங்களுக்கு தெரிந்து இருந்தால் காங்கிரஸ் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் தலைவர்களை அனுப்பி இருக்கமாட்டோம்” என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.