ஜூலை முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! இந்திய ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஜூலை முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! இந்திய ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

ஜூலை முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! இந்திய ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

Malavica Natarajan HT Tamil
Published Jun 11, 2025 04:52 PM IST

ஏஜெண்டுகள் மற்றும் போட்கள் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் மாயமாவதாக பயணிகள் புகார் அளித்த நிலையில் டிக்கெட் புக்கிங்கிற்கு புதிய விதிகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூலை முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! இந்திய ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?
ஜூலை முதல் தட்கல் டிக்கெட் விதிகளில் அதிரடி மாற்றம்! இந்திய ரயில்வேயின் புதிய கட்டுப்பாடுகள் என்ன? (Hindustan Times)

புகார்களும் மாற்றங்களும்

ஏஜெண்டுகள் மற்றும் போட்கள் மூலம் டிக்கெட்டுகள் அதிகளவில் புக் செய்யப்படுவதால் சாதாரண பயணிகளால் டிக்கெட்டுகளை பெற முடியவில்லை என்ற புகார் அதிகளவில் எழுந்த நிலையில், இந்த புதிய விதிகள் வந்துள்ளன. இருப்பினும், விதிகளில் உள்ள மாற்றங்கள் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்குமா, மேலும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குமா என்பது நடைமுறைக்கு வந்த பின்னே தெரியும்.

தட்கல் முன்பதிவு விதிகளில் மாற்றம்

இந்திய ரயில்வே அறிவித்த மாற்றங்களின்படி, தட்கல் திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் ஜூலை 1 முதல் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

ரயில்வே அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி, டிக்கெட்டுகளை “இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம்/ அதன் செயலி மூலம் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.” இந்த விதி அமலுக்கு வந்தவுடன், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் OTP அங்கீகாரமும் ஜூலை 15க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று PTI செய்தி வெளியிட்டுள்ளது.

டிக்கெட்டுகளுக்கு இ-ஆதார்

"தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே விரைவில் இ-ஆதாரை பயன்படுத்தத் தொடங்கும். இது தேவைப்படும் நேரத்தில் உண்மையான பயனர்களுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும்," என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஏஜெண்டுகளுக்கு செக்

மேலும், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் உண்மையான நேரத்திற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு திறக்கப்படும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் பொருள், ஏஜென்ட்கள் காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுக்கும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை குளிரூட்டப்படாத பெட்டிகளுக்கும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று PTI தெரிவித்துள்ளது.

"அங்கீகரிக்கப்பட்ட IRCTC ஏஜென்ட்கள் கூட இந்த ஆரம்ப கட்டத்தில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது, அவர்கள் பல பயனர் ஐடிகள் மற்றும் மின்னஞ்சல்களை வைத்திருந்தாலும் அவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாது." என்று அதிகாரி ஒருவர் முன்பு ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.

போலி கணக்குகள்

முன்பதிவுகளுக்கு AI கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து பேசியபோது அதிகாரி ஒருவர், கடந்த ஆறு மாதங்களில் IRCTC மூலம் 24 மில்லியன் பயனர்கள் போலியாக கணக்குகள் வைத்திருப்பதாகவும் அவர்கள் தடுக்கப்பட்டதுடன் மேலும் 2 மில்லியன் பேர் அதே காரணத்திற்காக விசாரணையில் இருப்பதாகவும் கூறினார்.