President Droupadi Murmu: "உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்" நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை!
President Droupadi Murmu: "வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நாட்டில் நடந்து வருகிறது. மகா கும்பமேளா இந்தியாவின் கலாச்சார அடையாளம் மற்றும் சமூக ஒளியின் திருவிழா” என புகழாரம்

"உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்" என பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறி உள்ளார்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம், சில நாட்களுக்கு முன்பு, 75 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தோம். அனைத்து இந்தியர்களின் சார்பாக, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு குழுவில் உள்ள அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்" என்று ஜனாதிபதி முர்மு கூறினார்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு வருத்தம் தெரிவித்த அவர், "வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நாட்டில் நடந்து வருகிறது. மகா கும்பமேளா இந்தியாவின் கலாச்சார அடையாளம் மற்றும் சமூக ஒளியின் திருவிழா. கோடிக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். மௌனி அமாவாசையில் நடந்த சம்பவம் குறித்து நான் வருத்தப்படுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கிற்கு மரியாதை
சில நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழந்தோம். பிரதமராக 10 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த அவர், நீண்ட காலம் நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாகவும் இருந்தார்.
"இன்று பெரிய முடிவுகள் விரைவாக எடுக்கப்படுவதை நாடு காண்கிறது. இந்த முடிவுகளில், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் முதன்மை கவனம் பெறுகிறார்கள் . "பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் மூலம் வீட்டுவசதி வழங்க எனது அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு கிடைக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் நாளன்று காலை 11 மணிக்கு மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். பட்ஜெட் உரையில் அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகள், வருவாய் மற்றும் செலவின முன்மொழிவுகள், வரிவிதிப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் கோடிட்டுக் காட்டப்படும். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்