அதிகரித்து வரும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா.. வான்வழிப் பாதையை மூடி அடுத்த அதிரடி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  அதிகரித்து வரும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா.. வான்வழிப் பாதையை மூடி அடுத்த அதிரடி!

அதிகரித்து வரும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா.. வான்வழிப் பாதையை மூடி அடுத்த அதிரடி!

Karthikeyan S HT Tamil
Published May 01, 2025 10:00 AM IST

அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய வான்வழிப் பாதையைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

அதிகரித்து வரும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா.. வான்வழிப் பாதையை மூடி அடுத்த அதிரடி!
அதிகரித்து வரும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா.. வான்வழிப் பாதையை மூடி அடுத்த அதிரடி!

பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களால் இயக்கப்படும் விமானங்கள், பாகிஸ்தானியர்களுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள், பாகிஸ்தானியர்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை பாகிஸ்தானின் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தடை உத்தரவு மே 23 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்

இது தொடர்பாக விமானிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதன்கிழமை மாலை நோட்டீஸ் அனுப்பியது. இந்த தடை உத்தரவு மே 23 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான தகவல் விமானத்துறையினருக்கு நோடம் அனுப்பப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுவாக, நோடம் என்பது விமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு அத்தியாவசிய தகவல்களைக் கொண்ட ஒரு அறிவிப்பாகும்.

26 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசாங்கம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியான சமீபத்திய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழிப் பாதையை பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்தல் உள்ளிட்ட பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை பாகிஸ்தான் கடந்த வாரம் மேற்கொண்டது. இந்த நிலையில், இந்திய வான்வழிப் பாதையைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

நேரடி விமான சேவைகள் இல்லை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் இல்லை. பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தங்கள் விமானங்களுக்கு இந்திய வான்வழியைப் பயன்படுத்துகின்றன.

ஏப்ரல் 23 அன்று, பஹல்காம் தாக்குதலுக்கு மறுநாள், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், அட்டாரியில் செயல்படும் ஒரே நில எல்லையை மூடுதல் மற்றும் படுகொலையுடன் எல்லை தாண்டிய தொடர்புகளை கருத்தில் கொண்டு இராஜதந்திர உறவுகளை குறைத்தல் உட்பட பாக்கிஸ்தானுக்கு எதிராக ஏராளமான நடவடிக்கைகளை இந்தியா அறிவித்தது.

இதற்கு விடையிறுப்பாக, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியது மற்றும் மூன்றாம் நாடுகள் உட்பட இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியதை நிராகரித்த பாகிஸ்தான், நீர் ஓட்டத்தை நிறுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் "போர் நடவடிக்கையாக" பார்க்கப்படும் என்று கூறியது.