பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது.. டிரம்பிடம் மோடி பேச்சு - நடந்தது என்ன?
கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 35 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார்.

கனடா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். கனடாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்திக்க முடியாததால், ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்தது என்றும் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார். 35 நிமிட உரையாடலின்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது "இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொண்டதில்லை, எப்போதும் ஏற்றுக்கொள்ளாது" என்று மோடி திட்டவட்டமாக கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மோடி - டிரம்ப் உரையாடல் குறித்து வெளியுறவுத் துறை செயலளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிபர் டிரம்பும் பிரதமர் மோடியும் இன்று சுமார் 35 நிமிடங்கள் பேசினர். உரையாடலின் போது, கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, "இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தம்" போன்ற பிரச்சினைகள் எந்த நேரத்திலும், எந்த மட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை என்பதை மோடி ட்ரம்பிடம் தெளிவுபடுத்தினார்.