HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 2004!’ வீட்டுக்கு அனுப்பப்பட்ட வாஜ்பாய்! பின் வாங்கிய சோனியா! பிரதமர் ஆன சிங்!
“Lok sabha Election 2004: தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என ஊடகங்கள் கூறி இருந்த நிலையில், முடிவுகள் அதற்கு மாறாக வந்தன”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இந்திய குடியரசு
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
திருப்பு முனை தந்த கார்க்கில் போர்!
மத்திய அரசு கலைந்த நிலையில் காபந்து பிரதமர் ஆக வாஜ்பாய் இருந்தார். 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட கார்கில் போர் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜுலை 26ஆம் தேதி வரை நீடித்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்தது.
நாடாளுமன்றத் தேர்தல் 1999
இதனை அடுத்து செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 182 தொகுதிகளில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்று இருந்தது. அடல் பிகாரி வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆனார்.
முன்கூட்டியே தேர்தல்
2003ஆம் ஆண்டின் இறுதியில் நான்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றி அக்கட்சிக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது.
‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பரப்புரையை நாடு முழுவதும் பாஜக தொடங்கி இருந்த நிலையில் முன் கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்த வாஜ்பாய், 13ஆவது மக்களவையை முன்கூட்டியே கலைக்க பரிந்துரைத்தார்.
இதன் விளைவாக ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
பாஜக கூட்டணியில் இருந்த திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணியில் இணைந்தது. அதிமுகவானது பாஜக கூட்டணியில் இணைந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் வலுவாக உள்ள மேற்கு வங்கம் , திரிபுரா, கேரளாவில் காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகளை எதிர்த்து தனித்து போட்டியிட்டன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவை சேர்ந்தவர் அல்ல; இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்தன.
பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி உடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டு தேர்தலை சந்தித்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தனர்.
தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என ஊடகங்கள் கூறி இருந்த நிலையில், முடிவுகள் அதற்கு மாறாக வந்தன.
பாஜகவை விட வெறும் 7 இடங்களை மட்டுமே கூடுதலாக வென்ற காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 138 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது.
கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால் பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட சோனியா காந்தி, பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார். தேர்தல் தோல்விக்கு பின்னர் தீவிர அரசியலில் இருந்து வாஜ்பாய் விலகத் தொடங்கினார்.