தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ht Elections Story: From Independence To Polls: Insights Into India's 1989 Lok Sabha Elections

HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1989!’ படுதோல்வி அடைந்த ராஜீவ்! மீட்பராக வந்த வி.பி.சிங்!

Kathiravan V HT Tamil
Feb 13, 2024 06:20 AM IST

”HT Elections Story: வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், அவரது அரசுக்கு, பாரதிய ஜனதா கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர்”

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1989
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1989

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய குடியரசு

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

காங்கிரஸின் தொடர் வெற்றிகள்

1952, 1957, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆகி இருந்தார். 1967, 1971 ஆகிய தேர்தல்களில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார்.

ஜனதா எழுச்சியும்! வீழ்ச்சியும்!

எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய ஜனசங்கம், சோலியலிஸ்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து ஜனதா கட்சியை தொடங்கின.

1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து வந்த சரண்சிங் அரசால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி தாமாகவே கவிழ்ந்தது.

அடுத்த வாரிசாக வந்த ராஜீவ் காந்தி!

1980ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது சொந்த பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்சியையும், அனுதாபங்களையும் ஏற்படுத்தியது. அடுத்து நடந்த தேர்தலில் வென்று ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். 

தொடர் சர்ச்சைகள்!

414 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்றிருந்தாலும் தொடர் சிக்கல்களை காங்கிரஸ் அரசு சந்தித்தது. 

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், போபால் விஷவாயு கசிவு. அஸ்ஸாம் கலவரம், பஞ்சாபில் கிளர்ச்சி , இலங்கை உள்நாட்டுப் போரில் இந்தியாவின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகள் காங்கிரஸ் கட்சிக்கும், ராஜீவ் காந்தியின் இமேஜிக்கும் பெரும் பங்கத்தை ஏற்படுத்தியது. 

வி.பி.சிங்கின் கிளர்ச்சி!

ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் நிதி மற்றும் பாதுகாப்பு துறைகளை கவனித்து வந்த வி.பி.சிங் எனப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் வெளிப்படையாக ராஜீவ்காந்தியின் மீது விமர்சனங்களை முன் வைத்ததால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தனது எம்.பி பதவியையும் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். 

அருண் நேரு, தற்போதைய கேரள ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் ஆகியோருடன் இணைந்து ஜன மோர்ச்சா என்ற கட்சியை உருவாக்கிய வி.பி.சிங், அலகாபாத்தில் இருந்து சுயேச்சை எம்.பி.யாக மீண்டும் மக்களவையில் நுழைந்தார்.

ஜனதாதளம் உருவாக்கம்!

ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்தநாளான 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்று, ஜன மோர்ச்சா ஜனதா கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சி, லோக் தளம், ஜக்ஜீவன் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து ஜனதாதளம் என்ற அமைப்பை உருவாக்கியது.

தேசிய முன்னணி உருவாக்கம்! 

இதுமட்டுமின்றி, என்.டி.ராமராவின் தெலுங்கு தேசம் கட்சி, கலைஞரின் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வந்து தேசிய முன்னணியை வி.பி.சிங் உருவாக்கி தேர்தலை சந்தித்தனர்.

படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ்! 

மொத்தம் இருந்த 531 தொகுதிகளில் 197 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஜனதாதளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

பிரதமராக பொறுப்பேற்ற வி.பி.சிங்!

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜனதாதளம் கட்சி கூட்டணியில் இருந்த திமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. ஆனால் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் ஒரு இடத்தில் வென்றது. 38 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், அவரது அரசுக்கு, பாரதிய ஜனதா கட்சியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். 

WhatsApp channel