Republic Day: குடியரசு தினத்திற்கு ஜனவரி 26 தேர்வானது எப்படி? அறியப்படாத வரலாறு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Republic Day: குடியரசு தினத்திற்கு ஜனவரி 26 தேர்வானது எப்படி? அறியப்படாத வரலாறு!

Republic Day: குடியரசு தினத்திற்கு ஜனவரி 26 தேர்வானது எப்படி? அறியப்படாத வரலாறு!

Kathiravan V HT Tamil
Jan 26, 2023 05:40 AM IST

இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாக காந்தியடிகள் அறிவித்திருந்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த இந்தோனேசிய அதிபர் டாக்டர் சோகர்னோவை வரவேற்கிறார். புகைப்படத்தில் அமெரிக்க எழுத்தாளர் டோரதி நார்மன் மற்றும் புருஷோத்தம் தாஸ் டாண்டன் ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த இந்தோனேசிய அதிபர் டாக்டர் சோகர்னோவை வரவேற்கிறார். புகைப்படத்தில் அமெரிக்க எழுத்தாளர் டோரதி நார்மன் மற்றும் புருஷோத்தம் தாஸ் டாண்டன் ஆகியோர் உள்ளனர்.

ஆகஸ்ட் 15-தேர்வு செய்ய இதுதான் காரணம்

இந்தியாவிற்கு விடுதலை அளிப்பது குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்படும் என மவுண்ட் பேட்டன் அறிவித்தார். இரண்டாம் உலகப்போரின் போது 1945 ஆகஸ்ட் 15ஆம் தேதியில்தான் பிரிட்டனை உள்ளடக்கிய நேசநாடுகளிடம் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. இது மவுண்ட் பேட்டன் பிரபுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக கருதப்பட்டதால் அவர்  ஆகஸ்ட் 15ஆம் தேதியை அறிவித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

ஜனவரி 26-ஐ சுதந்திர தினமாக கொண்டாடிய காங்கிஸ்

இந்த நிலையில் குடியரசு தினத்திற்கு ஜனவரி 26ஆம் தேதிய தேர்வு செய்ததற்கு பின்னாலும் ஒரு சுவாரசிய வரலாறு உண்டு. இந்திய விடுதலை போராட்டம் தீவிரமடைந்த 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு முழு சுதந்திம் என்ற அறைகூவல் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர நாளாக  காந்தியடிகள் அறிவித்தார்.   இந்த தேதியையே இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் அடையும் வரையில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வந்தனர். 

எப்படி தேர்வானது ஜனவரி 26?

1946 டிசம்பர் 12ஆம் ஆண்டிலேயே இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் வரைவுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். 1947 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்கு வரைவு அரசியல் அமைப்பு சட்டத்தை அரசிடம் சமர்பித்தது. 

அரசியல் அமைப்பு சட்டம் ஏற்புக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பெரும் விவாதங்கள் நடந்த நிலையில், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் அன்று 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனவரி 26ஆம் நாளை மக்களாட்சி மலர்ந்த தினமாக கொண்டாட நேரு தலைமையிலான அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்யவே 1950 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 26ஆம் தேதியை இந்திய குடியரசு நாளாக கொண்டாடி வருகிறோம். 

குடியரசு தின கொண்டாட்டம்

இந்திய குடியரசு தினத்தை பொறுத்தவரை டெல்லி இந்தியா கேட் பகுதியில் வீரமரணம் அடைந்த இந்திய படை வீரர்களுக்காக அமைக்கப்பட்ட அமர்ஜோதிக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுடன் குடியரசு தின கொண்டாட்டம் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவர்ணக்கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். பின்னர் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும். ஒவ்வொரு குடியரசு தினக்கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் சார்பில் வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. 

மாநிலங்களை பொறுத்தவரை ஆளுநர்கள் மூவர்ண கொடியை ஏற்றி காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வர். பின்னர் பண்பாட்டு நிகழ்ச்சிகளும், சிறந்த காவலர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.