தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Hbd Leonardo Da Vinci Happy Birthday Leonardo Da Vinci

HBD Leonardo Da Vinci: மோனா லிசா உயிரோவியர் டாவின்சி இத்தனை துறைகளில் வித்தகரா?

Priyadarshini R HT Tamil
Apr 15, 2023 06:05 AM IST

Happy Birthday : மோனா லிசா உயிரோவியத்தை உலகுக்கு கொடுத்து புகழ்பெற்ற லியோனர்டோ டாவின்சி ஒவியர் மட்டுமல்ல இன்ஜினியர், அறிவியலாளர், தத்துவமேதை என பல துறைகளில் வித்தகர். உடற்கூறியல், உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் கற்றவர்.

லியோனர்டோ டாவின்சியின் புகழ்பெற்ற கிறிஸ்து ஞானஸ்நான ஓவியம் மற்றும் மோனாலிசா ஓவியம்
லியோனர்டோ டாவின்சியின் புகழ்பெற்ற கிறிஸ்து ஞானஸ்நான ஓவியம் மற்றும் மோனாலிசா ஓவியம்

ட்ரெண்டிங் செய்திகள்

லியோனார்டோ டா வின்சி என்பது லியோணர்டோ செர் பியரொ டா வின்சி என்பதன் சுருக்கம் ஆகும். இவர் 1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி பிறந்தார். இத்தாலியின் டஸ்கானி பிராந்தியத்தின் வின்சி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் 1452ம் ஆண்டு பிளாரன்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு வெர்ரோசியோ என்ற ஓவியரிடம் பயிற்சி பெற்றார். வெர்ரோசியோவின் கிறிஸ்துவின் ஞானஸ்தானம் என்ற ஓவியத்தில் தோன்றும் தேவதையை லியோனார்டோ வரைந்தார். பின்னர் அவர் வரைந்த அர்னோ பள்ளத்தாக்கு ஓவியமே இவரது முதல் ஓவியமாகக் கருதப்படுகிறது. மிலன் பகுதியை ஆண்டு வந்த பிரபு லுடோவிகோ ஸ்ஃபோர்ஸவின் கீழ் பொறியாளர், கட்டிடக்கலை நிபுணர், சிற்பி, ஓவியராக பணியாற்றினார். பின்னர் 6ம் அலெக்ஸாண்டரின் மகன் சீசர் போர்கியாவிடம் ராணுவ கட்டுமான நிபுணராகவும், பொறியாளராகவும் பணிபுரிந்தார். ஃபிரெஞ்சு அரசர் 12ம் லூயி ஒன்றாம் ஃபாங்காய்ஸ் ஆகியோரின் கீழும் லியோணார்டோ பணியாற்றினார். மனித உடல்களின் அங்கங்களை குறித்து அவற்றை இயற்கையுடன் ஒப்பிட்டு மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள உறவைப் புலப்படுத்தும் விட்ருவியின் மனித ஓவியம் என்பது அவர் வரைந்த ஓவியம்தான்.

இவரது புகழ்பெற்ற மற்ற ஓவியங்கள், மோன லிசா, மடோனா, கடைசி இரவு விருந்து, மேகியின் வழிபாடு, பாறைகளின் கன்னி, ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜான், குழந்தையைத் தாங்கிய புனித ஆன் ஆகியவை ஆகும். வாழ்நாள் முழுவதும் அவர் வரைந்த ஓவியங்கள் பலவும் இன்று நாம் பயன்படுத்தும் பறக்கும் இயந்திரம், கால்குலேட்டர், டாங்க், பாரசூட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான தொடக்கால கருத்துக்களாக அமைந்துள்ளன. ஓவியத்தில் மட்டுமின்றி அறிவியல் ஆராய்ச்சிகளிலும் லியோனர்டோ ஈடுபட்டார். பல பரீட்சார்த்த நுட்பங்களை உள்ளடக்கிய இயேசுநாதரும் அவரது சீடர்களும் தோன்றிய ‘கடைசி இரவு விருந்து’ சுவரோவியத்தை 1495ம் ஆண்டு வரைந்தார். புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 1503ம் ஆண்டில் வரையப்பட்டது. ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜான் ஓவியமே அவர் கடைசியாக வரைந்த ஓவியம் என்று கருதப்படுகிறது. அண்மையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கனிமத்திற்கு 2011ம் ஆண்டு தாவின்சைட் என்று இவரது நினைவாக பெயரிட்டுள்ளது. சால்வதார் முண்டி என்ற ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருள் என்ற பெயரை பெற்றுள்ளது.

இவரது வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின் விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஓவியர் மட்டுமல்ல அறிவியலாளராகவும் இருந்து மனித உடல், இயந்திரப்பொறிகள் ஆகியவற்றை வரைந்த பல்துறை வித்தகரும், புகழ்பெற்ற ஓவியருமான லியோனர்டோ டா வின்சி 1519ம் ஆண்டு மே மாதத்தில் காலமானார். அவரது பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறுலதில் ஹெச்.டி. தமிழ் மகிழ்ச்சி கொள்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்