HBD Gautam Adani:’கல்லூரி ட்ராப் அவுட்! கூச்ச சுபாவம்! நடுத்தர வர்க்கம்!’ தடைகளை தாண்டி அதானி வென்றது எப்படி?
HBD Gautam Adani: மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், மின்பகிர்மானம், ரியல் எஸ்டேட், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம், நிதிசேவைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நுகர்வு பொருட்கள் விற்பனை, சிமெண்ட் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று கால் பதித்துள்ள கௌதம் அதானி கூச்ச சுபாவம் உடையவர்.

டாடா, பிர்லா, அம்பானி என்ற பெயர்களை உச்சரித்து வந்த இந்திய தொழில்துறை இன்று அதானி...! அதானி... என்ற பெயரை சதா காலமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் இருந்து தொழில் வணிகம் செய்துவரும் டாடாக்கள்!, 20ஆம் நூற்றாண்டில் இருந்து வணிகம் செய்து வரும் பிர்லாக்கள்! இந்திய விடுதலைக்கு பின்னர் இரண்டு தலைமுறைகளாக தொழில் செய்யும் அம்பானிகளுக்கு அப்பால் 21ஆம் நூற்றாண்டில் உச்சம் தொட்ட மனிதராக உயர்ந்து நிற்கிறார் முதல் தலைமுறை தொழில் முனைவோரான கௌதம் அதானி.
பிறப்பும் படிப்பும்…!
1962ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெயின் குடும்பத்தில் பிறந்த கௌதம் அதானியின் தந்தை சந்திலால் அதானி ஒரு சாதாரண சிறிய ஜவுளி வியாபாரி.
தனது பள்ளிப்படிப்பை ஷெத் சிமன்லால் நாகிந்தாஸ் வித்தியாலயாவில் படித்த அதானி, குஜராத் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால் அவரால் தனது பட்டப்படிப்பை முழுமையாக தொடர முடியவில்லை. இரண்டாவது ஆண்டிலேயே கல்லூரியில் இருந்து வெளியேறி வணிகத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்தார்.
மும்பைக்கு இடம் பெயர்வு
ஆனால் அதானியின் தேர்வு தந்தை மேற்கொண்டு வந்த ஜவுளி வியாபாரமாக அல்லாமல் வைர வியாபாரமாக இருந்தது.
1978ஆம் ஆண்டில் மும்பைக்கு இடம்பெயர்ந்த அதானி, மகேந்திரா பிரதர்ஸ் நிறுவனத்தில் வைரம் பிரிக்கும் பணியாளர் வேலைக்கு சேர்ந்ததுடன், தொழிலில் அனுபவம் பெற்று வைர வியாபாரி ஆனார்.
பிளாஸ்டிக் நிறுவனம்
1981ஆம் ஆண்டு அவரது மூத்த சகோதரர் மஹாசுக்பாய் அதானி அகமதாபாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையை வாங்கிய நிலையில் அதன் செயல்பாடுகளை கவனிக்க கௌதம் அதானியை அழைத்தார். அண்ணனின் அழைப்பை ஏற்று அகமதாபாத்திற்கு இடம் பெயர்ந்த அதானி, பாலிவினையல் குளோரைடு என்னும் பிவிசி-யை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
1985ஆம் ஆண்டில் சிறு தொழில்களுக்கு பாலிமர்களை இறக்குமதி செய்து சப்ளே செய்ய தொடங்கிய அவர் 1988ஆம் ஆண்டில் ’அதானி எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் மின்சாதன பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் கவனம் செலுத்தியது.
திருப்பு முனை தந்த 1991
1991ஆம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வந்த தாராளமயமாக்கல் கொள்கைகள் அதானியின் தொழில் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1994ஆம் ஆண்டில் முந்த்ரா துறைமுகத்தின் அவுட்சோர்சிங் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றது. தற்போது இந்தியாவின் மிகப்பெரும் தனியார் துறைமுகமாக முந்த்ரா துறைமுகம் விளங்குகிறது.
கூச்சசுபாவம் உடையவர்
மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின்பகிர்மானம், ரியல் எஸ்டேட், விமான நிலைய பராமரிப்பு, மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம், நிதிசேவைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நுகர்வு பொருட்கள் விற்பனை, சிமெண்ட் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று கால் பதித்துள்ள கௌதம் அதானி கூச்ச சுபாவம் உடையவர்.
இரண்டு முறை மயிரிழையில் உயிர் பிழைத்தவர்
1997ஆம் ஆண்டில் ஆட்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்றால் அகமதாபாத்தில் கௌதம் அதானி கடத்தப்பட்டார். ஒரு நாள் அவரை அந்த கடத்தல் கும்பலின் வசம் இருந்த அவரை பணம் கொடுத்து மீட்டதாக கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டில் மும்பை பயங்கரவாத தாக்குதல் நிகழ்வின் போது தாஜ் ஓட்டலில் தங்கி இருந்த அதானி மயிரிழையில் உயிர் தப்பினார்.
”அதானியின் வெற்றிக்கு பின்னால்!”
இயற்கை வளங்கள், அரசு உரிமங்கள், நிலம் உள்ளிட்டவைதான் இந்திய தொழிலதிபர்களின் மூலங்களாக விளங்குவதாக கூறும் பொருளாதார ஆய்வாளர்கள், இந்த மூன்றையும் அரசின் உதவியுடன் கையகப்படுத்தியதே அதானியின் இந்த வெற்றிக்கு காரணம் என்கின்றனர்.
”என் வளர்ச்சிக்கு காரணம் ராஜிவ் காந்தி”
அதானியின் இத்தகைய பெரும் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று இன்று வரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், தனது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என்று ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறி உள்ளார்.
ஹிண்டன்பர்க் சரிவு
கடந்த ஆண்டில் ஹிண்டர்ன்பர்க் ஆய்வு அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 50 ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடும் சரிவை சந்தித்து குழுமத்தின் பங்கு சரிவுகள் குறித்து பேசிய அதானி ”40 ஆண்டுகளுக்கு மேலான ஒரு தொழிலதிபராக தனது பணிவான பயணத்தில் அனைத்து பங்குதாரர்களிடம் இருந்தும், குறிப்பாக முதலீட்டாளர்களிடம் இருந்தும் அமோக ஆதரவைப் பெறுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். வாழ்க்கையில் நான் எதையாவது சாதித்திருந்தாலும், அதற்குக் காரணம் பங்குதார்கள் மற்றும் முதலீட்டாளர்கள்தான் அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை, முதலீடு செய்த எனது முதலீட்டாளர்கள் நலனே முதன்மையானது மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம்தான்” என கூறி இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்