Halwa ceremony: பட்ஜெட் தாக்கலுக்கு முன் 'அல்வா' தயாரிக்கப்படுவது ஏன்?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Halwa Ceremony: பட்ஜெட் தாக்கலுக்கு முன் 'அல்வா' தயாரிக்கப்படுவது ஏன்?

Halwa ceremony: பட்ஜெட் தாக்கலுக்கு முன் 'அல்வா' தயாரிக்கப்படுவது ஏன்?

Manigandan K T HT Tamil
Jan 26, 2023 07:17 AM IST

பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் வகையில், இன்று வழக்கமான ‘அல்வா’ கிண்டும் விழா நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டுவார்.

அல்வாவை நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)
அல்வாவை நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப் படம்)

அல்வா தயாரிப்பு விழா என்பது வருடம்தோறும் வழக்கமாக நடக்கும். இதில் இனிப்பு பண்டமான அல்வா தயாரிக்கப்பட்டு பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேசிய தலைநகரான புது டெல்லியில் உள்ள நார்த் பிளாக் அடித்தளத்தில் நிதி அமைச்சகத்தின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அல்வா தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிதியமைச்சர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள், நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் யூனியன் பட்ஜெட் பிரெஸ் உறுப்பினர்கள் ஆகியோர் அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தயாரிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகமே அல்வா கிண்டும் விழா கருதப்படுகிறது.

பட்ஜெட் விவரங்களை ரகசியம் காப்பதற்காக நார்த் பிளாக்கில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் தங்கவைக்கப்படுவார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அவர்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களது போன் அழைப்புகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். ஆண்டுதோறும் இவ்வளவு ரகசியமாக பட்ஜெட் ஆவணங்கள் தயார் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அல்வா விழா என்பது நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சிறப்பு அச்சகமும் உள்ளது. இது 1980 முதல் 2020 வரை பட்ஜெட் ஆவணங்களை அச்சிட்டது.

இருப்பினும், 2020 முதல், பட்ஜெட் காகிதமற்ற வடிவத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அல்வா கிண்டு விழா நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.