தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kejriwal Pokes Bjp: ‘சிபிஐ-யை 1 நாள் தந்தால் 50% பாஜக தலைவர்களை சிறையிலடைப்பேன்’

Kejriwal Pokes BJP: ‘சிபிஐ-யை 1 நாள் தந்தால் 50% பாஜக தலைவர்களை சிறையிலடைப்பேன்’

I Jayachandran HT Tamil
Nov 25, 2022 11:39 AM IST

சிபிஐ பொறுப்பை ஒருநாள் எனக்குக் கொடுத்துப் பாருங்கள். பாஜக தலைவர்களில் பாதி பேரை சிறையில் அடைப்பேன் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கொக்கரித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே ஊழலை நாட்டிலிருந்து ஒழிக்க முடியும்.

ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை. தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி படுக்கை, சோபா மெத்தைகளை கிழித்து எறிந்தனர். கடைசிவரை அவர்களுக்கு ஒரு நயா பைசா கூட கிடைக்கவில்லை. பணம் இருந்தால் எடுத்துச் சென்றிருக்கலாமே!

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளும் கடைந்தெடுத்த ஊழல்வாதிகளுக்கு அடிபணிந்து போவதில்லை. அதேவேளையில் மக்களுக்காக உழைப்பவர்களை தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள். எனக்கு ஒரு நாள் சிபிஐ, அமலாக்கத்துறை பொறுப்பை கொடுத்தால் பாதி பாஜக தலைவர்களை சிறையில் அடைப்பேன்.

இலவச திட்டங்களை அறிவித்து மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியோ பணக்காரர்களுக்குத்தான் இலவச திட்டங்களை செயல்படுத்துவார். ஆனால் நான் சாமானியர்களுக்கு இலவச திட்டங்களை செயல்படுத்துவேன்.

நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை வழங்குவது எந்த அரசாங்கத்தின் கடமை. நல்ல அரசாங்கம்தான் அதைச் செய்யும். இப்படிப்பட்ட வேலைப்பாடுகளை இந்து மதத்தில் "புண்ணியம்" என்று அழைக்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி அதைத்தான் செய்கிறது.

தில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 230 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜகவுக்கு 20க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். அதேபோல் குஜராத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும்.

கடந்த 5 ஆண்டுகளில் தில்லி அரசு தில்லி பெருநகர மாநகராட்சிக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணத்தை தில்லி பெருநகர மாநகராட்சி நிர்வாகம் ஏப்பம் விட்டுவிட்டது. நாங்கள் கொடுத்த பணம் எங்கே போனது என்பதை பாஜக தெரிவிக்க வேண்டும்.

தில்லியில் கடந்த ஏழு ஆண்டுகளில் நாங்கள் நிறைய நற்பணிகளைச் செய்துள்ளோம். நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், கல்வியை மேம்படுத்தியுள்ளோம். புறநகர் இலவச மருத்துவ கிளினிக்குகளை உருவாக்கியுள்ளோம். நகர்ப்புற மருத்துவமனைகளை மேம்படுத்தியுள்ளோம். தில்லியில் நாங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.

திகார் சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு விவிஐபி வசதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திகார் சிறை கையேட்டில் உள்ள விதிகளின்படிதான் அவருக்கு உணவு வழங்கப்படுகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார். சிபிஐ, அமலாக்கத்துறையைத் தந்தால் பாஜக தலைவர்களில் பாதிபேரை சிறையிலடைப்பேன் என்று பகிரங்கமாக கேஜ்ரிவால் சவால் விட்டது அவரது இயலாமை என்றும் விரக்தி என்றும் பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் அரசியல் சாசனத்தின்படி தில்லி காவல்துறைகூட அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இதனால்தான் கேஜ்ரிவால் இவ்வாறு பேசினார். தைரியம் இருந்தால் அரசியல் சட்டத்தைத் திருத்தி தில்லி முதல்வரின் கீழ் காவல்துறையைக் கொண்டு வந்து பார்க்கட்டுமே! எல்லா மாநிலங்களிலும் இப்படித்தானே இருக்கிறது! பாஜகவினருக்கு அந்த அளவுக்கு தைரியமும், நேர்மையும் கிடையாது. முடிந்தால் கொடுத்துப் பார்க்கட்டுமே என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் பாஜகவுக்குப் பதிலடி தரும்வகையில் கூறியுள்ளார்.

கேஜ்ரிவாலின் இந்தப் பேச்சு நாட்டு மக்களிடையே அவர்பால் கவனத்தைத் திருப்பியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்