Gyanvapi mosque case: ஞானவாபி மசூதி வழக்கில் எதிர்தரப்புக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்
Allahabad High Court: ஞானவாபி மசூதியை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய ஜூலை 2023 இல் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) உத்தரவிட்டது.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் 'வுசுகானா' பகுதியில் ஆய்வு நடத்துவது தொடர்பான மனு மீது அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மற்றும் பிற எதிர் தரப்புகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று (ஜன. 31) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் ஞானவாபி ஆய்வு அறிக்கை "கருத்தில் கொள்ளத்தக்கது" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கு நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் தலைமையிலான தனி பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சிருங்கர் கவுரி வழிபாட்டு வழக்கு 2022 (தற்போது வாரணாசி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது) வழக்கில் ஐந்து வாதிகளில் ஒருவரான ராக்கி சிங் இந்த மனுவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
பார் அண்ட் பெஞ்ச் அறிக்கையின்படி, 'சிவலிங்கம்' அமைந்துள்ளதாகக் கூறப்படும் பகுதியைத் தவிர்த்து, ஞானவாபி மசூதியின் 'வுசுகானா' பகுதியை ஆய்வு செய்ய ASI-க்கு உத்தரவிடுமாறு ராக்கி சிங் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
முன்பு, அத்தகைய உத்தரவை பிறப்பிக்க அக்டோபர் 2023இல் வாரணாசி நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராக்கி சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் 'வுசுகானா' பகுதியில் ஆய்வு நடத்துவது தொடர்பான மனு மீது அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மற்றும் பிற எதிர் தரப்புகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று (ஜன. 31) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு உத்தரவில், நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா, 'சிவலிங்கம்' கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் பகுதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2022 மே 17 அன்று உத்தரவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு முரணானது என்பதால், 'வுசுகானா' பகுதியில் ஆய்வு நடத்த தொல்லியத் துறைக்கு உத்தரவிடுவது பொருத்தமற்றது என்று வாரணாசி நீதிமன்றம் நியாயப்படுத்தியிருந்தது.
கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தியத் தொல்லியத் துறை அறிக்கையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் "தற்போதுள்ள கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு ஒரு இந்து கோயில் இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 2023 இல் வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி பகுதியை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அங்கு இந்துக் கோயிலின் மீது மசூதி கட்டப்பட்டதா என்பதை கண்டறியுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.
ஜூலை 21 அன்று, நீதிபதி அஜய கிருஷ்ண விஸ்வேஷா, காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள மசூதி இருக்கும் இடத்தில், காலக்கணிப்பு, அகழ்வாராய்ச்சி மற்றும் தரை ஊடுருவும் ரேடார் (ஜிபிஆர்) நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார்.
ஜூலை 21 உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, பல தசாப்தங்களாக நீடித்து வரும் சர்ச்சையில் இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் நீதியின் நலனுக்காக அறிவியல்பூர்வமான விசாரணை அவசியம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி மீண்டும் தொடங்கியது.
காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டிய வளாகத்திற்குள் இந்து சிலைகள் மற்றும் தெய்வங்கள் இருப்பதாகக் கூறி, மசூதி வளாகத்திற்குள் வழிபாடு நடத்த உரிமை கோரிய இந்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் மனுக்களை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
டாபிக்ஸ்