வடமாநிலங்களில் கடும் குளிர்: விலங்குகளுக்கு ஹீட்டர் மற்றும் கேம்ப் ஃபயர் வசதி!
Guwahati zoo: அடுத்த சில நாட்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவிவருவதை நாம் அறிவோம். குறிப்பாக வடமாநிலங்களில் குளிரின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பலர் வீடுகளை விட்டு அதிகாலையில் வருவதை தவிர்த்து வருகின்றனர்.
குளிரை பொருத்தவரை அது மனிதர்களை மட்டும் இம்சிப்பதில்லை. கால்நடைகள், விலங்குகள், பறவைகள் என அனைத்து ஜீவராசிகளையும் குளிர் கடுமையாக தாக்கும். அந்த வகையில் நாட்டில் உள்ள பல உயிரியல் பூங்காக்களில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு குளிரிலிருந்து காத்துக் கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
அந்த வகையில், கவுஹாத்தியில் உள்ள உயிரியல் பூங்காவில் பல்வேறு வசதிகளை அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளனர்.
மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளின் வசதியை மனதில் கொண்டு, கவுஹாத்தி உயிரியல் பூங்காவில் உள்ள அதிகாரிகள், விலங்குகளின் அடைப்புகளில் ஹீட்டர்களை நிறுவியுள்ளனர்.
மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் புலி, சிங்கம் போன்றவற்றின் கூண்டுகளுக்கு அருகில் ஹீட்டர்களை வைத்திருப்பதைக் காண முடிந்தது.
குவஹாத்தி உயிரியல் பூங்காவின் பணியாளர் ரஜினிகாந்த் டேகா கூறுகையில், "நாங்கள் இங்கு ஹீட்டர்களை ஏற்பாடு செய்துள்ளோம், மேலும் விலங்குகள் குளிர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருக்க மற்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
"புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு, நாங்கள் ஹீட்டர்களை நிறுவியுள்ளோம், அதே நேரத்தில் கரடிகளுக்கு நாங்கள் கதகதப்பை தரும் தண்டுகளை பயன்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.
"பறவைகளுக்கு 200 வாட் பல்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அவற்றின் கூண்டுகள் இரவில் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
இரவு பறவைகளுக்கு பெட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இதோ போல சூரத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள உயிரின காப்பாகங்களிலும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க கேம்ப் ஃபயர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளனர்.
அடுத்த சில நாட்களுக்கு குளிர் கடுமையாக இருக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்