Inderjit : முதல் என்ற அடைமொழி பல முறை பெற்ற பெண்.. இந்தர்ஜித் கௌர்..யார் இவர்?
Inderjit Kaur Sandhu : மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் முதல் பெண் தலைவர் இந்தர்ஜித் கௌர் குறித்து இதில் காண்போம்.
"முதல்" என்ற அடைமொழி பல முறை பெற்ற பெருமைக்குரியவர் இந்தர்ஜித் கௌர். அதாவது பணியாளர் தேர்வு ஆணையத்தின் முதல் பெண் தலைவர், பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் போன்ற சிறப்புகளை பெற்றவர் இந்தர்ஜித் கௌர். 1923 ஆண்டு மற்றும் நாள் செப்டம்பர் 1ஆம் தேதி பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் கர்னல் ஷேர் சிங் சந்துவுக்கு மகளாக பிறந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கர்னல் ஷேர் சிங் முற்போக்கு சிந்தனை உடையவர். அதற்கு உதராணமாக இந்தர்ஜித் கௌர் சாந்துவின் பிறப்பை தந்தை ஒரு பையன் பிறக்கும்போது மக்கள் கொண்டாடும் அளவுக்கு ஆடம்பரமாக கொண்டாடினார். இந்தர்ஜீத் கௌர் சந்து முன்னேற இதுவே உதவியது என்று சொல்லலாம்.
இந்தர்ஜித் கௌர், பாட்டியாலாவின் விக்டோரியா பெண்கள் பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை மேற்கொண்டார். மேற்படிப்புக்கு லாகூர் சென்றார். அங்கு ஆர்.பி. சோஹன் லால் பயிற்சி கல்லூரியில் அடிப்படை பயிற்சியும், லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் தத்துவயியலில் முதுகலை மேல்படிப்பை முடித்தார்.
இதன் பின்னர் அவர் விக்டோரியா பெண்கள் இடைநிலைக் கல்லூரியில் தற்காலிகமாக பணியைத் தொடங்கினார், மேலும் 1946ஆம் ஆண்டில் பாட்டியாலாவின் பெண்கள் மகளிர் கல்லூரியில் தத்துவம் கற்பிக்கத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அகதிகள் பாகிஸ்தானில் இருந்து வரத் தொடங்கினர்.
இந்த கால கட்டத்தில் இந்தர்ஜித் கௌர் ஆர்வலராகவும் பணியாற்றி முக்கிய பங்கு வகித்தார். மாதா சாஹிப் கௌர் தளத்தை உருவாக்க உதவினார், பின்னர் அதன் செயலாளரானார். இந்த குழு, தலைவி சர்தார்னி மன்மோகன் கவுரின் உதவியுடன், பாட்டியாலாவில் சுமார் 400 குடும்பங்களை புனரமைக்க உதவியது. அந்த நாட்களில் சிறுமிகளும் உதவ முன்வந்தனர். அன்றைய காலக்கட்டத்தில் இது பெரிய விஷயம்.
பின்னர், இந்தர்ஜித் கௌர் 1958 இல் சண்டீகர் கல்லூரியில் கல்வி பேராசிரியராக நியமிக்கப்பட்டு பின்னர் இதே கல்லூரியில் துணை முதல்வரானார். பின், பிரபல எழுத்தாளர் கியானி குர்ஜித் சிங்குடன் இந்தர்ஜித்திற்கு திருமணம் ஆனது. அவர் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.
இந்தர்ஜித் கௌர் கல்வியாளராகவும், நிர்வாகியாகவும் பலரின் வாழ்க்கையில் தடம் பதித்தார். அவர் தனது காலகட்டத்தில் சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்தார். பர்தா அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவர் இந்த பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது மட்டுமல்லாமல், சிறுமிகளின் கல்வி மற்றும் உரிமைகளுக்காகவும் உழைத்தார்.
பின்னர் அவர் குடும்பத்துடன் வாழ அமிர்தசரஸ்க்கு இடம் பெயர்ந்து ,அங்குள்ள பெண்கள் மகளிர் கல்லூரியின் முதல்வரானார்.இதன் பின்னர் அவர் மீண்டும் பாட்டியாலாவுக்கு திரும்பினார். பிறகு பாட்டியாலாவில் உள்ள பெண்கள் மகளிர் கல்லூரியின் முதல்வரானார். ஒரு வருடத்திற்குள், அவர் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
இந்த கல்லூரியில் ஒரு அறிவியல் பிரிவைத் திறந்தார், இது மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது. பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றார். பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிவடைவதற்கு சற்று முன்பு அவர் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் இரண்டு வருட இடைவெளி எடுத்துக் கொண்டு 1980 ஆம் ஆண்டில் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும் பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பெண்களில் ஒருவர் தான் இந்தர்ஜித் கௌர். இப்படி பெண்களுக்காக பல புரட்சி செய்த இந்தர்ஜித் கௌரை நினைவுகூர்ந்து போற்றுவோம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.