பள்ளிகளில் நிதிசார் கல்வித் திட்டம்: மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?
பட்ஜெட்டை உருவாக்கி நிர்வகிப்பது பற்றிக் குழந்தைகளுக்குக் கற்பிப்பது மிக முக்கியமானது. அவர்கள் தங்கள் நிதிகளை எவ்வாறு புத்திசாலித்தனமாக ஒதுக்கிக்கொள்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் நிதிசார் கல்வித் திட்டம் குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து நிதிசார் கல்விக்கான VP அகாடமிக்ஸ், ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் ஜிம்மி அஹுஜா விவரித்துள்ளார்.
வேகமாக மாறிவரும் உலகில், நாம் இளைய தலைமுறையினருக்கு வழங்கக்கூடிய மிகவும் மதிப்புமிக்க திறன்களில் ஒன்று நிதிசார் கல்வியாகும். பெரியவர்களிடையே நிதிசார் அறிவில் வெளிப்படையான ஏற்றத்தாழ்வு உள்ளதை இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது.
இதுவே பள்ளிகளில் விரிவான நிதிசார் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான அவசரத் தேவையை வலியுறுத்துகிறது. மாணவர்கள் நிச்சயமாக எதிர்நோக்கவுள்ள நிதிசார் சவால்களுக்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கு, நிதிசார் கல்வி குறித்துத் திடமான அடித்தளத்தை நிறுவ வேண்டும்.
இந்தக் கட்டுரையில், பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான விரிவான நிதிசார் கல்வித் திட்டத்தில் என்னென்ன அடிப்படை நிதித் திறமைகளையும் கருத்துகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும், தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் பற்றிப் பள்ளிகள் குழந்தைகளுக்கு எவ்வாறு திறம்படக் கற்பிக்கலாம் மற்றும் அத்தகைய திட்டங்களின் நீண்டகால நன்மைகள் எவை ஆகியவை பற்றி ஆராய்வோம்.
அடிப்படை நிதிசார் திறமைகள் மற்றும் கருத்துகள்
பள்ளிகளில் குழந்தைகளுக்கான விரிவான நிதிசார் கல்வித் திட்டத்தை அடிப்படைகளுடன் தொடங்க வேண்டும். திட்டமானது அடிப்படை நிதிசார் திறமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நிதிசார்ந்த தகுதிக்கான கட்டடத் தொகுதிகளாகச் செயல்படும் கருத்துகளை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தத் திறமைகளில் அடங்குபவை:
● பட்ஜெட்டைத் திட்டமிடுதல்: பட்ஜெட்டை உருவாக்கி நிர்வகிப்பது பற்றிக் குழந்தைகளுக்குக் கற்பிப்பது மிக முக்கியமானது. அவர்கள் தங்கள் நிதிகளை எவ்வாறு புத்திசாலித்தனமாக ஒதுக்கிக்கொள்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
● சேமித்தல்: பணத்தை ஒழுங்குமுறையாகச் சேமிக்கும் பழக்கத்தை நாம் குழந்தைகளிடையே கொண்டுவர வேண்டும். இதனுடன் நெருக்கடிக் கால நிதியின் முக்கியத்துவத்தையும் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போது அது எவ்வாறு பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.
● முதலீடு செய்தல்: முதலீடு செய்வது பற்றிய கல்வி, குழந்தைகளுக்கு வயதிற்கு மீறிய விஷயமாகத் தோன்றினாலும், முன்கூட்டியே முதலீடு செய்வதற்கான அடிப்படைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது நீண்ட கால அடிப்படையில் கணிசமான பங்களிப்பை அளிக்கும்.
கூட்டு வட்டி மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்வதன் சக்தி போன்ற கருத்துகளை இளம் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும்.
● முடிவெடுத்தல்: மாணவர்கள் புத்திசாலித்தனமான பணம் சார் முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் விருப்பங்களை அறிந்து, உள்ள தகவலின் அடிப்படையில் தேர்வுகளைச் செய்ய வேண்டும். அதே சமயம் அந்த முடிவுகள் அவற்றால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க உதவக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
● இடர் பகுப்பாய்வு: மாணவர்கள் வரவிருக்கும் இடர்களை அடையாளம் காணக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பணத்தை நிர்வகிக்கும்போது ஒருவர் சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகளை மதிப்பிடும் மற்றும் நிர்வகிக்கும் ஆற்றலை இந்தத் திட்டம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு நிதிசார் கல்வியின் மிக முக்கியமான பாடங்களில் ஒன்று குழந்தைகளுக்கு அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் வேறுபடுத்தி அறிய உதவுகிறது. இந்தக் கருத்தைத் திறம்படக் கற்றுக்கொடுக்க, நிஜ வாழ்க்கையில் நடக்கும் காட்சிகளைப் பள்ளிகள் பயன்படுத்தலாம்.
மாணவர்கள் அங்கு இருப்பவற்றைத் தேவைகள் அல்லது விருப்பங்கள் என வகைப்படுத்தலாம். அதாவது வீடு என்பது ஒரு தேவை, ஆனால் கேமிங் கன்சோல் என்பது ஒரு விருப்பம். கூடுதலாக, பட்ஜெட்டைத் திட்டமிடும் பயிற்சிகள் முலம் மாணவர்களைத் கற்பனையான பட்ஜெட் திட்டங்களை உருவாக்கவைத்து இந்த வேறுபாட்டை மேலும் உறுதிப்படுத்த முடியும்,
இப்பயிற்சிகளின்போது அத்தியாவசியமற்ற பொருட்களைக் கருத்தில் கொள்வதற்கு முன் உணவு, வீட்டுவசதி மற்றும் கல்வி போன்ற தேவைகளுக்கு பட்ஜெட்டை ஒதுக்க வைக்கலாம்.
தேவைகளை விட விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் விளைவுகள் பற்றிய கலந்துரையாடல்களை ஆசிரியர்கள் தொடங்கலாம். இந்தத் தேர்வுகள் அவர்களின் எதிர்கால நிதியின் திடத்தன்மையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மாணவர்கள் ஆய்வு செய்ய உதவுகிறது.
நிதிசார் கல்வியின் நீண்ட கால நன்மைகள்
பள்ளிகளில் ஒரு வலுவான நிதிசார் கல்வித் திட்டம் மாணவர்களுக்கு அவர்களின் நிதி பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் பல நீண்ட கால நன்மைகளை வழங்க முடியும்.
முதலாவதாக, இது மாணவர்களுக்குச் சுய நிதியை உருவாக்க உதவுகிறது, இதனால் சேமித்தல், செலவு செய்தல் மற்றும் அவர்களின் பணத்தைப் பெருக்குதல் பற்றிய தகவலறிந்த தேர்வுகளைச்செய்ய அவர்களுக்கு உதவுகிறது.
கூடுதலாக, இது கடனைத் தவிர்ப்பதை ஊக்குவிக்கிறது, ஏனெனில் நிதிசார் கல்வி பெற்றவர்கள் அதிகக் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு மற்றும் பொருளாதாரத் திடத்தன்மைக்குப் பங்களிக்கும் வகையில் தங்கள் கடனைப் பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும், நிதிசார் கல்வியானது அக்கல்வியைப் பெற்றவர்களுக்கு எதிர்கால இலக்குகளான வீட்டு உரிமை அல்லது கல்வி போன்றவற்றை அடைய அதிகாரம் அளிக்கிறது, இது மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு வழிவகுக்கும்.
கடைசியாக, இது ஒரு தலைமுறைரீதியான தாக்கத்தை வளர்க்கிறது. மாணவர்கள் வளரும்போது, இந்த விலைமதிப்பற்ற பாடங்களை அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க முடியும், இது குடும்பங்களுக்குள் நிதிசார் அறிவு மற்றும் திடத்தன்மையைப் பகிர்ந்துகொள்ள வைக்கிறது.
முடிவில், பள்ளிகளில் ஒரு விரிவான நிதிசார் கல்வித் திட்டம் என்பது பாடத்திட்டத்திற்கு
மதிப்புமிக்க கூடுதல் பிரிவாக மட்டுமன்றி, நவீன உலகின் சவால்களுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் ஒரு முக்கிய அங்கமாகவும் உள்ளது. அடிப்படை நிதிசார் திறமைகளைக் கற்பிப்பதன் மூலம், அடுத்த தலைமுறையினர் தகவலை அறிந்து, பொறுப்பான நிதிசார் முடிவுகளை எடுக்க, அவர்களின் எதிர்கால நிதிசார் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்ய நாம் அதிகாரம் அளிக்க முடியும். இது அவர்களின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும்,
அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பலனளிக்கிறது!
டாபிக்ஸ்