Radhe Maa: பேக்புக்கில் ராதே மாவை அவமதித்த அடையாளம் தெரியாத நபர்: காவல் துறை எஃப்.ஐ.ஆர் பதிவு
பெண் சாமியார் ராதே மாவை அவமதிக்கும் வகையில் போட்டோஸ், வீடியோ வெளியிட்டதாக சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் சாமியார் சுக்விந்தர் கவுர் என்ற ராதே மாவை அவதூறாக சித்தரித்த பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளர் மீது மகாராஷ்டிர போலீசார் செவ்வாய்க்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
புகார்தாரரின் கூற்றுப்படி, விபின் அஹுஜா, குளோபல் அட்வர்டைசிங் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார், கடந்த 20 ஆண்டுகளாக ராதே மாவின் பக்தராக உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், போரிவாலியில் வசிக்கும் அஹுஜா, ஜனவரி 3 ஆம் தேதி பேஸ்புக்கில் பிரவுசிங் செய்து கொண்டிருந்தபோது பிரேம் சந்திரா என்ற டிஸ்ப்ளே பெயரைக் கொண்ட புரொஃபைலைக் கண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அந்தப் புரொஃபைலின் டிஸ்ப்ளே படமாக ராதே மாவின் போட்டோ உள்ளது என்றாலும், பக்கத்தைத் திறந்தபோது நிர்வாணமாக இருக்கும் பெண்களின் போட்டோஸ், வீடியோக்கள் இருந்ததைக் கண்டதாக அவர் புகாரில் கூறினார்.
இதுகுறித்து அவர் உடனடியாக ராதே மாவுக்கு தகவல் தெரிவித்தார், அவரிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர், அஹுஜா போரிவாலி காவல்துறையை அணுகி புகார் மனுவை அளித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 294 (ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள்) மற்றும் 501 (அவதூறு தகவல்களை அச்சிடுதல் அல்லது வெளியிடுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவுகளின் கீழ் பேஸ்புக் பேஜை நிர்வகித்து வந்தவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
"அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம், அந்த பேஸ்புக் பக்கத்தை நிர்வகித்து வந்தவரின் அடையாளத்தை அறிய முயற்சிக்கிறோம்" என்று போரிவாலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
