தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  233 படுதோல்வி! அசராமல் கர்நாடகா தேர்தலில் களமிறங்கிய ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்

233 படுதோல்வி! அசராமல் கர்நாடகா தேர்தலில் களமிறங்கிய ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்

Karthikeyan S HT Tamil
Apr 14, 2023 08:58 PM IST

Election King Padmarajan: 233 முறை பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தேர்தல் மன்னன் பத்மராஜன் இந்த முறை கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தேர்தல் மன்னன் பத்மராஜன்.
தேர்தல் மன்னன் பத்மராஜன்.

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தின் சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தமிழகம் மட்டும் இல்லாமல் தேசிய அளவில் முக்கிய தலைவர்களான நரசிம்மராவ், வாஜ்பாய், எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, எடியூரப்பா, சதானந்த கெளடா, பினராயி விஜயன், ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்தது களத்தில் நின்றுள்ளார் பத்மராஜன்.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளார். 1988-ல் தொடங்கி 32 எம்.பி தேர்தல்கள், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளார் பத்மராஜன். மேலும் கர்நாடகா தேர்தல், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என எதையும் விட்டுவைக்கவில்லை பத்மராஜன்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் பத்மராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். கருணை உள்ளம் கொண்ட ஈரோடு வாக்காளர்களில் 6 பேர் அவருக்கு வாக்களித்திருந்தனர். இருப்பினும் சற்றும் மனம் தளராத பத்மராஜன் தனக்கு வாக்களித்த அந்த 6 பேருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

இதுவரை 233 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் கூட பத்மராஜன் இன்னும் மனம் தளரவில்லை. ஒருபோதும் வெற்றி பெற கூடாது தோல்வியை மட்டுமே சந்திக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்று கூறும் பத்மராஜன், வரும் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

வெற்றியோ.. தோல்வியோ களத்தில் நிற்பேன் என்பது போல் இந்த முறை அவர் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையை எதிர்த்து களம் காண்கிறார். இந்த தேர்தலில் கர்நாடகா முதல்வராக உள்ள பாஜகவின் பசவராஜ் பொம்மை மீண்டும் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். 2008, 2013, 2018 என மூன்று முறை பசவராஜ் வெற்றி பெற்ற அதே சிக்காவி தொகுதியில் போட்டியிட நேற்று தனது வேட்புமனுவை பத்மராஜன் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் 234-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்