தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ec Seeks Action Against Min Karandlaje Over Person From Tn Plants Bomb Remark

Bengaluru Cafe Blast: பெங்களூரு கஃபே வெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

Marimuthu M HT Tamil
Mar 20, 2024 10:51 PM IST

Bengaluru Cafe Blast: ஷோபா கரந்தலஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே
மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே (X)

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் கருத்துகள் தேர்தல் நடத்தை விதிகளை (எம்.சி.சி) மீறியதாக, திமுக குற்றம் சாட்டியதை அடுத்து, மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வந்துள்ளது. 

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அளித்த செய்தியாளர் சந்திப்பில்,’’தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக அளித்தப் புகார் மீது பாஜக தலைவரும் மத்திய இணைஅமைச்சருமான ஷோபா கரந்தலஜே மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகத் தலைமை நிர்வாக அதிகாரிக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது" என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. 

தமிழர்கள் வெடிகுண்டு வைக்க பெங்களூரு வருகிறார்கள் எனப் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு எதிராக திமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. 

மேலும், தமிழகத்தில் இருந்து ஒருவன் பயிற்சி எடுத்து வந்த ஒருவன், ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைக்கிறான் எனவும் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது.

திமுக தனது புகாரில், "குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமையால் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், மாண்புமிகு அமைச்சர் ஷோபா கரந்தலஜே அவர்கள், இந்த வெடிகுண்டு தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் வைக்கப்பட்டது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். அவர்கள் கூறியதாவது, “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று, இங்கு வெடிகுண்டு வைக்கிறார்கள். ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைத்தது”எனக் கூறியிருக்கிறார். இது  தமிழர்கள் மற்றும் கன்னடர்கள் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும். எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் ஆகியப் பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரவேண்டும்’’என்றார்.

பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபேயில் மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். குண்டுவைத்தவர்களுக்கு தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. 

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கு கர்நாடகத்தின் அரசியலில் புயலை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பெங்களூரில் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த ராமேஸ்வரம் கஃபே உணவகம் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான திவ்யா மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோரின் கோரிக்கையின்படி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வரா ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு, பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. போலீஸார் இந்த ஹோட்டல் இருக்கும் பகுதியில் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். ஹோட்டலுக்கு வருபவர்கள் அனைவரிடமும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்