Earthquake: அடுத்தடுத்து அசாமை தாக்கிய நிலநடுக்கங்கள் - பீதியில் உறைந்த மக்கள்!
மத்திய அசாமில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அசாமில் இன்று காலை ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் முறையே 3.6 மற்றும் 2.8 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அசாமில் இன்று காலை 9.03 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையம் பிரம்ம புத்திரா ஆற்றின் தென் கரையில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள டிடாபார் அருகே 50 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் அருகில் உள்ள சிவசாகர், கர்பி அங்லாங் மற்றும் கோலாகாட் மாவட்டங்களிலும் பிரம்மபுத்திராவின் வடக்குக் கரையில் உள்ள லக்கிம்பூரிலும் மக்கள் அதிர்வை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது நிலநடுக்கம் பகல் 11.02 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளது. பிரம்மபுத்ராவின் வடக்குக் கரையில் உள்ள தர்ராங் மாவட்டத்தில் டல்பான் அருகே 9 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உடல்குரி, பக்சா மற்றும் சோனிந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வட கிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் உணரப்படுவது மக்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உணரப்பட்டு வருவதால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.