‘அரிய மண் வளத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும்’ உக்ரைனுக்கு டிரம்ப் நிபந்தனை!
உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அதிக உதவி செய்துள்ளது. ஆனால், இனி உதவிக்கு பதிலாக அரிய மண்வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
ரஷ்யாவுடன் நடக்கும் போரில் அமெரிக்காவின் ஆதரவு தொடர, உக்ரைன் தனது நாட்டில் கிடைக்கும் அரிய மண்வளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ‘ஓவல் அலுவலகத்தில்’ செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உக்ரைனுக்கு தனது ஐரோப்பிய கூட்டாளிகளை விட அதிகளவில் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக,’ அப்போது டிரம்ப் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ‘‘நாம் உக்ரைனுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறோம். அதன்படி, நாம் அவர்களுக்கு வழங்கும் அனைத்து உதவிகளுக்கும் பதிலாக அவர்கள் தங்கள் அரிய மண்வளங்களை நமக்கு வழங்க வேண்டும்’’ என்று அப்போது டிரம்ப் தெரிவித்தார்.
‘உக்ரைம் மண் வளத்தை பாதுகாக்க விரும்புகிறேன்’
உக்ரைன் அரசாங்கத்திடம் இருந்து, நவீன உயர் தொழில்நுட்ப பொருளாதாரத்திற்கு முக்கியமான அரிய மண்வளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கும் ஒப்பந்தம் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அப்போது, டிரம்ப் கூறினார். டிரம்ப் மேலும் கூறுகையில், ‘நான் இந்த அரிய மண்வளங்களைப் பாதுகாக்க விரும்புகிறேன். நாம் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை செலவிடுகிறோம். அவர்களிடம் மிகச் சிறந்த அரிய மண்வளங்கள் உள்ளன, மேலும் நான் இந்த அரிய மண்வளங்களைப் பாதுகாக்க விரும்புகிறேன். அவர்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
ரஷ்யாவின் கருத்து என்ன?
போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் முன்னர் கூறியிருந்தார். அது பற்றி டிரம்ப் கூறுகையில், ‘ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் நாம் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நாம் அந்த முட்டாள் போரை நிறுத்தப் போகிறோம்.’ என்று கூறியிருந்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை ‘அசோசியேட்டட் பிரஸ்’ (ஏபி) நிறுவனத்திடம் பேசுகையில், ‘அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே உக்ரைனின் இருப்பு இல்லாமல் எந்த பேச்சுவார்த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது,’ என்று கூறியிருந்தார்.
மேலும், ‘டிரம்ப் நிர்வாகத்துடன் தனது குழு தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் பொதுவான அளவிலேயே உள்ளதாகவும், விரிவான ஒப்பந்தத்திற்கு விரைவில் நேரில் சந்திப்புகள் நடைபெறும் என்று தான் நம்புவதாகவும்,’ எப்போது ஜெலென்ஸ்கி கூறினார். மேலும் அதற்கு கொஞ்சம் நாம் வேலை செய்ய வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்