Tamil News  /  Nation And-world  /  Dmk Mp Mm Abdulla Request To Union Government To Release Of Thondaiman Postage Stamp
திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா
திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா

மாமன்னர் தொண்டைமான் பகதூருக்கு அஞ்சல் தலை - திமுக எம்பி கோரிக்கை

09 February 2023, 16:39 ISTKarthikeyan S
09 February 2023, 16:39 IST

DMK MP M.M. Abdulla: புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூர் அவர்களது நூற்றாண்டு நினைவை முன்னிட்டு, அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கெளரவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா, “புதுக்கோட்டை சமஸ்தானமானது 1680 முதல் 1948 வரை இருந்த அரச மாகாணம். சுதந்திரத்திற்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதியன்று இந்திய ஒன்றியத்துடன் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் சமஸ்தானமும் இதுவேயாகும். தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகுதிதான் இது.

H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூர் அவர்கள்தான் இந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவதாகவும், கடைசியாகவும் முடிசூட்டப்பட்ட மன்னர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த உடனே தனது நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள அவர் தீர்மானித்தார். தனது மொத்த கருவூலத் தொகையுடன் சுதந்திர இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் முழு மனதுடன் கையெழுத்திட்ட முதல் மன்னரும் இவரே. அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் கூட H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் அவர்களால்தான் இந்தியாவை சமஸ்தானங்களுடன் இணைக்கும் நம்பிக்கையைப் பெற்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செயல்பாட்டிற்காக தன்னலமின்றி தனது அரச மாளிகையை வழங்கியவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், கொடைக்கானல் படகு மற்றும் ரோயிங் கிளப் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். 1935 ஆம் ஆண்டு ஜார்ஜ் V வெள்ளி விழா பதக்கம், 1937 ஆம் ஆண்டு ஜார்ஜ் VI முடிசூட்டு விழா நினைவுப் பதக்கம் ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டவர். 

தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில், மக்களுக்குச் சேவை செய்ய திருமணத்தைத் தவிர்த்துவிட்டு, துறவியைப் போல வாழ்ந்து வந்தார். 1997 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தனது 74வது வயதில் காலமானார். எனவே, புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் H.H. ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூர் அவர்களது நூற்றாண்டு நினைவை முன்னிட்டு நமது தேசத்தின் ஒற்றுமைக்காக அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டாபிக்ஸ்