Digital : டிஜிட்டல் வழி கற்றலில் பின்தங்கிய இந்தியா! மாணவர்களிடையே அதிகரிக்கும் கற்றல் திறன் குறைபாடு! ஷாக் ஆய்வறிக்கை
Digital Learning : கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் 503 மாவட்டத்தில் டிஜிட்டல் வழி கற்றல் முறைக்கு குறைவான அளவே வாய்ப்பிருந்ததாகவும், அதில் 240 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவே வாய்ப்பு இருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொற்று காலத்தில் பள்ளிகளை மூடிவிட்டு, ஆன்லைன் வகுப்புகளை கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் 503 மாவட்டங்களில் டிஜிட்டல் கற்றலுக்கு குறைவான அளவு வாய்ப்புகளே இருந்ததாகவும், அதில் 240 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவே வாய்ப்புகள் இருந்ததாகவும் அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மாவட்டங்கள் 10 முதல் 30 சதவீத வாய்ப்புக்களையே பெற்றவையாக அந்த தொற்று ஏற்பட்ட 2 ஆண்டுகளிலும் இருந்தன. கல்வி அமைச்சகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. டிஜிட்டல் கற்றலை அதிகரிக்க வேண்டிய தேவையை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆறு பிரிவுகளின் அடிப்படையில் மாவட்டங்கள் மதிப்பிடப்பட்டன. அவை, கற்றல் வெளிப்பாடு, பலம்வாய்ந்த வகுப்பறை கலந்துரையாடல், உட்கட்டமைப்பு வசதிகள், பள்ளி மற்றும் பாதுகாப்பு டிஜிட்டல் கற்றல் மற்றும் அரசின் செயல்முறை ஆகியன ஆகும். அதில் மாவட்டங்கள் சில 10 சதவீதத்துக்கு குறைவான டிஜிட்டல் கற்றலையும், சில 90 சதவீதத்துக்கு அதிமாகவும் இருந்தன.
2020 – 21ல் 240 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு டிஜிட்டல் கற்றலில் இருந்தது. 156 மாவட்டங்கள் 11 முதல் 20 சதவீதத்தில் இருந்தன. 107 மாவட்டங்கள் 21 முதல் 30 சதவீதத்தில் இருந்தன என்று அறிக்கை கூறுகிறது.
அது சில மாவட்டங்களில் 2021-22ம் ஆண்டுகளில் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. 119 மாவட்டங்கள் தொடர்ந்து 10 சதவீத குறைவாக டிஜிட்டல் கற்றலில் இருந்தன. 209 மாவட்டங்கள் 11 முதல் 20 சதவீதம் வரையிலும், 116 மாவட்டங்கள் 21 முதல் 30 சதவீதம் வரையிலும் இருந்தன.
கிராமப்புறம், நகர்புறம் குறித்த ஆய்வையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. டெல்லி, சண்டிகர், கேரளா ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்கள் 50க்கு 25 முதல் 32 வரை மதிப்பெண் பெற்றன. கிராமப்புற மாவட்டங்களில் அஸ்ஸாமின் சால்மாரா மான்கச்சார், அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் மற்றும் பீகாரின் கிஷண்கஞ்ச் மாவட்டம் ஒரு பிரிவில் மதிப்பெண் பெற்றிருந்தன.
குறைவான மதிப்பெண் பெற்ற மாவட்டங்களில் அஸ்ஸாமின் கோல்பாரா மற்றம் ஹைலாகந்தி, சட்டீஸ்கரின் கொண்டேகான், ஜார்க்கண்டின் கோடடா மற்றம் பாக்கவுர், மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மற்றும் உத்திரபிரதேசத்தின் டியேரியா மற்றும் பாலியா ஆகியவை ஆகும்.
10 மாவட்டங்களில் 20 சதவீத வளர்ச்சியும், 74 மாவட்டங்களில் 10 சதவீத வளர்ச்சியும் 2021-22ம் ஆண்டுகளில் இருந்தது. 2019-20ம் ஆண்டுகளைவிட அதிகரித்திருந்தது. 202 மாவட்டங்களில் 2021-22ம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.
கற்றலுக்கு இணையதள வசதியுள்ள பள்ளிகளின் சதவீதத்தை கருத்தில்கொண்டு மாவட்டங்களின் செயல்திறன் மதிப்பிடப்பட்டது. ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை, கம்ப்யூட்டர் உதவியுடன் பாடம் நடத்தக்கூடிய வசதியுள்ள பள்ளிகளின் சதவீதம், கம்ப்யூட்டர் இயக்க தெரிந்த ஆசிரியர்கள் சதவீதம், கம்யூட்டர் வழியாக பாடம் நடத்துபவர்களின் சதவீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு மூலம் கடந்த 2 ஆண்டுகளில் டிஜிட்டல் கற்றலை நாம் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோவிட் – 19 உணர்த்தியது. மேலும், இதுபோன்ற அவசர காலங்களில் நாம் வழக்கமாக பள்ளி சென்று படிக்க முடியாதபோது ஏற்படும் அசாதாராண சூழலை நாம் சந்திக்க எப்படி தயாராவது என்பதையும் அது உணர்த்தியது.
கற்றல் வெளிப்பாடுகளில் ஒரே ஒரு மாவட்டம் மட்டும், 10 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தது. 10 மாவட்டங்கள் 11 முதல் 20 சதவீதத்தில் இடம்பெற்றிருந்தன. 63 மாவட்டங்கள் 21 முதல் 30 சதவீதம் வரை பெற்றிருந்தன. 289 மாவட்டங்கள் 51 முதல் 60 சதவீதத்தில் இடம்பெற்றன. இது 2020 – 21 அறிக்கை விவரம். ஆனால் 2021 -22ம் ஆண்டில் கற்றல் வெளிப்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் செயல்முறைகள் என அனைத்திலும் 10 சதவீதத்துக்கும் குறைவாக எந்த பள்ளியும் மதிப்பெண் பெறவில்லை.
கோவிட் – 19 தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு, பள்ளிகள் செயல்படாமை போன்றவற்றால், மாணவர்களின் கற்றல் அளவு கடுமையாக குறைந்துவிட்டதாக மற்றொரு ஆய்வறிக்கை தெரிவித்தது. 2012ம் ஆண்டு முதலே குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்து விட்டதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. 2014ம் ஆண்டு முதல் கணக்கிடுதல் திறன் குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.