தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Described By Gandhi As Mickey Mouse Sarojini Naidu Memorial Day

Singappenney: காந்தியால் மிக்கி மவுஸ் என வர்ணிக்கப்பட்ட சரோஜினி நாயுடு நினைவு நாள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 02, 2024 06:00 AM IST

பாரதிய கோகிலா’ என்ற புனைப்பெயரும், இந்தியாவின் நைட்டிங்கேல் என்ற சிறப்பு பெயரும் பெற்ற சரோஜினி நாயுடு நினைவு நாளான இன்று அவர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

காந்தியால் மிக்கி மவுஸ் என வர்ணிக்கப்பட்ட சரோஜினி நாயுடு நினைவு நாள்
காந்தியால் மிக்கி மவுஸ் என வர்ணிக்கப்பட்ட சரோஜினி நாயுடு நினைவு நாள்

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா, 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோரநாத் சட்டோபத்யாயா. இவரது தாய் வரதா சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். சரோஜினிநாயுடு இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார்.

கல்வி

சென்னை பல்கலைக்கழகத்தில் தனது 12வது வயதில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரிகளில் படித்தார். உருது, பாரசீகம், தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி ஆகிய மொழிகளில் நன்றாக பேசுவார். அவருக்கு பிடித்த கவிஞர் ஷெல்லி ஆவார்.

இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த சரோஜினி நாயுடு பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ’கோல்டன் திரஷ்ஹோல்ட்’ என்ற புத்தகம் பிரபலமானது. இவரது ’இன் த பஜார்ஸ் ஆஃப் ஹைதராபாத்’ என்ற கவிதை தொகுப்பு பள்ளி பாடங்களில் இடம் பெற்றுள்ளது.

இவர் கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் காட்டினார். அதுவே இவருககு ’கவிக்குயில்’ என்று பெயரை பெற்று தந்தது. அந்த கவிதையில் ஹைதராபாத்தின் சந்தைகள் எப்படி இருக்கும் என்றும், முத்துக்களுக்கு புகழ்பெற்ற ஹைதராபாத்தின் முத்துக்கள் குவிந்த கடைவீதியின் அழகை வர்ணித்து இருந்தார்.

திருமணம்

இந்திய சுதந்திர போராட்டத்தில் சரோஜினி நாயுடுவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சரோஜினி நாயுடு இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது கோவிந்தராஜீலு என்ற மருத்துவரை காதலிக்க தொடங்கினார். இவர் தனது 19வது வயதில் திருமணம் செய்து கொண்டார். மாற்று சாதியினரை திருமணம் செய்துகொள்ள சமூகத்தில் கடும் எதிர்ப்பு இருந்த காலத்தில் சரோஜினி நாயுடு துணிந்து சாதி மறுப்பு திருமணத்தை குடும்பத்தினரின் ஒப்புதலுடன் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என்ற 4 குழந்தைகள் பிறந்தனர். அதில் பத்மஜா பின்னாளில் மேற்குவங்கத்தின் ஆளுனரானார்.

அரசியல்

1905ம் ஆண்டு வங்கதேசம் பிரிக்கப்பட்டதை அடுத்து அவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மகாத்மா காந்தியுடன் தண்டி யாத்திரையில் கலந்து கொண்டார். பின்னர் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார். சுதந்திர போராட்டம் சரோஜினி நாயுடுவுக்கு பல்வேறு தலைவர்ளை அறிமுகப்படுத்தியது. இளைஞர் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். 1925ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சரோஜினி நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் அரசு 1919ம் ஆண்டு கொண்டு வந்த ரௌவுலட் சட்டத்திற்கு எதிராக காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் சரோஜினி நாயுடு முதலில் இணைந்தார். நியுயார்க் சென்றபோது அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இந்திய இன வேற்றுமை குறித்து மிகவும் வருந்தினார். சுதந்திரம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டு காந்தியுடன் சிறை சென்றார். பின்னர் சிறையில் இருந்து திரும்பி ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்றார். இதனால் மீண்டும் கைது செய்யப்ப்பட்டார். காந்தியுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, அவருடனே சிறையும் சென்றவர்.காந்தியால் 'மிக்கி மவுஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், இன்றைய உத்தரபிரதேசம், அன்றைய யுனைடட் ப்ரொவின்சஸின் ஆளுநராக பதவியேற்றார். இதன் மூலம் இவர் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றார். இவர் 1949ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்