டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! பல ஆம் ஆத்மி தலைவர்களும் தோல்வி முகம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! பல ஆம் ஆத்மி தலைவர்களும் தோல்வி முகம்!

டெல்லி தேர்தல் முடிவுகள்: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! பல ஆம் ஆத்மி தலைவர்களும் தோல்வி முகம்!

Kathiravan V HT Tamil
Published Feb 08, 2025 12:57 PM IST

Delhi Election Results: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Delhi Election Results: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! பல ஆம் ஆத்மி தலைவர்களும் தோல்வி முகம்!
Delhi Election Results: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! பல ஆம் ஆத்மி தலைவர்களும் தோல்வி முகம்! (ANI)

தேர்தல் ஆணைய வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 30088 வாக்குகளை பெற்று பர்வேஷ் வர்மா வெற்றி பெற்று உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் 25999 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்து உள்ளார். மூன்றாம் இடத்தை பிடித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்‌ஷித் 4568 வாக்குகளை பெற்று உள்ளார். நோட்டாவுக்கு 314 வாக்குகள் கிடைத்து உள்ளது. மேலும் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்து உள்ளார். 

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நிலவரம்

மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) வாக்குகளில் கணிசமான பகுதியை காங்கிரஸ் கட்சி பிரித்து உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் இது 6.7% வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்று உள்ளது. ஆம் ஆத்மிக்கு 43.1% வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) 47.9% வாக்குகளும் கிடைத்து உள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பின்னணி

ஆகஸ்ட் 16, 1968 அன்று ஹரியானாவில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய வருவாய் சேவை பணியில் இருந்தவர். ஐஐடி கரக்பூரில் இயந்திரப் பொறியியல் படித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செயற்பாட்டாளராக செயல்பட்ட அவருக்கு 2006 ஆம் ஆண்டில் ரமோன் மகசேசே விருது கிடைத்தது. அன்னா அசாராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்த கெஜ்ரிவால் 2012ஆம் ஆண்டு ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கினார்.

டெல்லி அரசியல்

2013 ஆம் ஆண்டில், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்று முறை முதல்வராக இருந்த காங்கிரஸின் ஷீலா தீட்சித்தை தோற்கடித்து ஆட்சியை பிடித்தார். 49 நாட்களுக்குப் பிறகு தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால் அவர் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை வென்று கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். 2020ஆம் ஆண்டில் 62 இடங்களைப் பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். இலவச மின்சாரம், சிறந்த பள்ளிகள், இலவச மருத்துவமனைகள் உள்ளிட்ட திட்டங்கள் டெல்லி மக்களின் ஆதரவை பெற்றுத் தந்தது.

டெல்லியின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சி இதை ஒரு அரசியல் சதி என்று கூறியது. ஆறு மாதங்கள் சிறையில் கழித்த பிறகு, உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சில நாட்களுக்குப் பிறகு, அவர் ராஜினாமா செய்து, கல்வி அமைச்சர் அதிஷியிடம் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்த்தார்.