ED: ’கிச்சடி செய்வதில் ஊழல்!’ சிவசேனா நிர்வாகியை தூக்கிய அமலாக்கத்துறை!
“கைது செய்யப்பட்டுள்ள சூரஜ் சவான், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரேவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது”

மகாராஷ்டிராவில் கோவிட் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிச்சடி விநியோகம் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சி நிர்வாகி சூரஜ் சவானை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஆதித்யா தாக்கரேவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் சவான் மீதான வழக்கில் ரூபாய் 6.37 கோடி மதிப்புள்ள முறைகேடுகள் நடந்ததாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் (EOW) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.
கிச்சடி வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்ட பிஎம்சி துணை ஆணையரிடம் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.
கோவிட் தொற்று காலத்தில் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) 4000 கோடி அளவுக்கு மேற்கொண்ட ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக இந்த விசாரணை அமைந்துள்ளது. அதிகாரிகள் உதவி உடன் அதிகவிலைக்கு கிச்சடி வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டதாக இதில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் எம்.பி கிரித் சோமையா, கிச்சடி ஊழலில் ஆதித்யா தாக்கரேவுக்கு நெருக்கமானவரான சூரஜ் சவானை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாகவும், அவர் ரூ .132 கோடி ஊழலில் ஈடுபட்டார், சஞ்சய் ராவத்தின் குடும்பம் இதன் மூலம் பயனடைந்துள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.
அமலாக்கத்துறையின் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா (யுபிடி) கட்சியின் ஆதித்யா தாக்கரே, நாடு "ஜனநாயகத்தின் வரலாற்றில் இருண்ட நாட்களை" காண்கிறது என்று கூறினார். "உண்மையிலேயே ஊழல் செய்பவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் என குற்றம்சாட்டி உள்ளார்.
எதிர்க்கட்சிகள் மீது திட்டமிட்டு அலமாக்கத்துறை மூலம் கைது நடவடிக்கைகளை எடுப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளது.
ஏற்கெனவே சட்டவிரோத பணப்பரிமற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் திமுகவின் செந்தில் பாலாஜி, ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
