தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Congress President Poll: Counting Of Votes For The New Chief Begins At Aicc Hq

Congress President poll: காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Karthikeyan S HT Tamil
Oct 19, 2022 12:12 PM IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது (கோப்புப்படம்)
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு திங்கட்கிழமை (அக்.17) நடைபெற்றது. 137 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் வரலாற்றில் தேசியத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற 6-வது தேர்தல் இதுவாகும். இதில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். 

காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் சுமார் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து இன்று (அக்.19) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கட்சி தலைமை அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் இன்றே அறிவிக்கப்படும்.

முன்னதாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ராஜிநாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா தொடர்ந்து வந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ராகுல் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். 

இதையடுத்து மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக 22 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் அமரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்