Rahul Gandhi About Exit Poll: ’எக்ஸிட் போல் அல்ல! மோடி மீடியா போல்!’ கருத்து கணிப்புகளை கலாய்த்துவிட்ட ராகுல்!
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்த கேள்விக்கு, "சித்து மூஸ் வாலா கா பாடல் சுனா ஹை ஆப்னே?" என்று ராகுல் காந்தி நகைச்சுவையாக பதிலளித்தார்.

நேற்று வெளியானது எக்ஸிட் போல் அல்ல, மோடி மீடியா போல் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை ராகுல் காந்தி கிண்டல் அடித்து உள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் ஆலோசனை
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான வியூகம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் மக்களவை வேட்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
எக்ஸிட் போல் அல்ல; மோடி போல்
நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து புதுடெல்லியில் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர். அப்போது ‘அதற்கு பெயர் எக்ஸிட் போல் அல்ல; மோடி மீடியா போல்’ என்று கூறினார். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்த கேள்விக்கு, "சித்து மூஸ் வாலா கா பாடல் சுனா ஹை ஆப்னே?" என்று ராகுல் காந்தி நகைச்சுவையாக பதிலளித்தார். (சித்து மூஸ் வாலா பாடலைக் கேட்டிருக்கிறீர்களா) "295"ஐக் குறிப்பிட்டு; அவர் 295 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று பதிலளித்தார்.
295 இடங்களில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் நம்பிக்கை
கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "மாநில காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் நாங்கள் விவாதித்தோம், அவர்கள் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு அரசாங்கத்திற்கு போலியான கருத்துக் கணிப்பு. இந்திய கூட்டணி 295 பெறும். நிச்சயமாக ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.
இந்திய கூட்டணியை சேர்ந்த பிரதிநிதிகள் இன்று மாலை 4:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நிர்வச்சன் சதனில் தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளனர்.
இன்று முன்னதாக, ஜெய்ராம் ரமேஷ் எக்ஸிட் போல் கணிப்புகளை நிராகரித்து, "உளவியல் விளையாட்டு" என்று குறிப்பிட்டார்.
"வெளியேறப் போகும் பிரதமர், ஜூன் 4-ம் தேதி நிச்சயம் வெளியேற வேண்டியவர், இதையெல்லாம் சதி செய்து, எக்சிட் போல்களை சமாளித்துவிட்டார். ஜூன் 4-ம் தேதி எக்சிட் போல்களிலும், முடிவுகளிலும் பெரும் வித்தியாசம் இருக்கும். இந்தியா கூட்டணி 295க்குக் கீழே எதையும் பெறுவது சாத்தியமில்லை" என்று காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புகளின்படி, மக்களவைத் தேர்தலில் என்டிஏ 361-401 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 131-166 இடங்களை வெல்லும் என்றும், மற்ற கட்சிகள் 8 முதல் 20 இடங்கள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
ரிப்பளிக் PMarq கருத்துக்கணிப்பு 543 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 359 இடங்களையும், இந்தியா கூட்டணிக்கு 154 இடங்களையும் மற்றவர்களுக்கு 30 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்று கூறியது.
ரிப்பளிக் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 353-368 இடங்களையும், இந்தியா கூட்டணி 118-113 இடங்களையும், மற்றவர்கள் 43-48 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்று கூறியது.
நியூஸ்எக்ஸ் டைனமிக்ஸ் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 371 இடங்களையும், இந்தியா கூட்டணிக்கு 125 இடங்களையும் மற்றவர்களுக்கு 47 இடங்களையும் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
