தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Chinese Vessel Has Reached Sri Lanka Amid Concerns In India

எதிர்ப்பை மீறி இலங்கை வந்தது சீன உளவுக் கப்பல்

Karthikeyan S HT Tamil
Aug 16, 2022 09:44 AM IST

சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் -5 இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

சீன உளவு கப்பல் (கோப்புப்படம்)
சீன உளவு கப்பல் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

நவீன ரேடார்கள், விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படும் சீனாவின் யுவான் வாங்-5 கப்பலின் இலங்கை பயணத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கடலோரப் பகுதிகள் உளவு பார்க்கப்படும் என்ற அச்சமும் நிலவியது.

ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழ்நாட்டில் அமைந்துள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகிற அணு ஆராய்ச்சி மையங்களை இந்தக் கப்பலின் மூலம் கண்காணிக்க முடியும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருந்தார். இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லாத வகையில் இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு, இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரியிருந்தது. ஆனால், யுவான் வாங் -5 வருகைக்கு அனுமதி பெறுவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் சீன தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது. அதன்படி, சீன உளவு கப்பலானது இன்று காலை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்ததடைந்தது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை அந்தக் கப்பல் இங்குதான் நிறுத்தப்பட்டிருக்கும். 

இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி பணிகளில் யுவான் வாங் -5 உளவுக்கப்பல் ஈடுபட உள்ளது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பல் இலங்கை வந்துள்ளதை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. அதேநேரம் சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கியதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் இது ஒரு வழக்கமான நடைமுறை எனவும் இலங்கை விளக்கம் அளித்துள்ளது. 

IPL_Entry_Point