’China Plus One கொள்கை!’ உலக நாடுகள் இந்தியாவை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும்! வி.ஜி.சக்தி குமார் பேட்டி
உற்பத்தி துறையை பொறுத்தவரை இனி உலக நாடுகள் இந்தியாவை சார்ந்துதான் இயங்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால், எங்கே அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி நடைபெறுகிறதோ, அங்குதான் விலையும் குறைவாக இருக்கும் என ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ஜி.சக்திகுமார் கூறி உள்ளார்

’China Plus One’ கொள்கையால் இனி உலக நாடுகள் இந்தியாவை சார்ந்துதான் இயங்க வேண்டிய நிலை ஏற்படும் என கான்கிரீட் கட்டுமான பொருட்கள் உபகரண உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சக்தி குமார் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழிடம் பேசிய அவர், உலக நாடுகளுக்கு இந்தியா குறித்து இருந்த பார்வையும் தற்போது முழுமையாக மாறி உள்ளது என தெரிவித்து உள்ளார்.
கேள்வி:- கான்கிரீட் கட்டுமான பொருட்கள் உபகரண உற்பத்தியில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது?
நேபாளம், பூடான், மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், சூடான், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
கொரோனா தொற்று, உக்ரைன் - ரஷ்யா போர், இளம் பணியாளர்கள் இன்மை, விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகள் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி துறைகளை பாதிப்படைய செய்து உள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து உள்ளது.
கேள்வி:- இந்தியாவின் மீதான உலக நாடுகள் பார்வை எப்படி உள்ளது?
நான் ஜப்பான் சென்றபோது, நமது நாட்டிற்கு கிடைத்த மதிப்பு மரியாதை கண்டு வியந்தேன். இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து ஆச்சர்யப்படுவதாக பலரும் என்னிடம் கூறினர். 1997ஆம் ஆண்டில் இருந்து உலக நாடுகளுக்கு பயணித்து வருகிறேன். என்னுடைய முதல் பயணித்தில் எனக்கு கிடைத்த மரியாதையும், உலக நாடுகளுக்கு இந்தியா குறித்து இருந்த பார்வையும் தற்போது முழுமையாக மாறி உள்ளது.
கேள்வி:- China Plus One கொள்கை இந்தியாவிற்கான உற்பத்தி வாப்புகளை அதிகரிக்குமா?
உலகின் உற்பத்தி துறைக்கே இனி நாம்தான் முழுமையான தீர்வாக இருக்க போகிறோம். இந்த வளர்ச்சி இந்தியாவுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கானது, தொழில் நிறுவனங்களுக்கானதாக உள்ளது.
எங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மையான வருவாய் உள்நாட்டு விற்பனையில் இருந்து கிடைக்கிறது. எங்கள் நிறுவனத்தின் ஏற்றுமதி 200 கோடி ரூபாய் என்ற சிறிய அளவில்தான் உள்ளது. கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தில் 2 ஆயிரம் கோடியாக இருந்த எங்கள் நிறுவனத்தின் வருவாய் தற்போது 5 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. ஆனால் வரும் காலங்களில் எங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்.
’சைனா ப்ளஸ் ஒன்’ கொள்கை ஆனது இந்தியா, மெக்சிகோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சாதகமாக மாறி உள்ளது. மெக்சிகோ நாடு அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறிவிட்டது. வியட்நாம் மிகப்பெரிய அளவில் வளர்ந்தாலும் தற்போது மின்சார பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இன்றைய சூழலில் இது இந்தியாவுக்கு பல வாய்ப்புகள் உருவாகி உள்ளது. புதியதாக தொழிற்சாலைகளை தொடங்க நினைக்கும் பெரு நிறுவனங்கள் இந்தியாவை தேர்வு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் முதலீடுகள் இந்தியாவுக்கு வருவது மிகப்பெரிய வாய்ப்பு. நமது உற்பத்தி பொருட்கள் நிலைத்தன்மையை (sustainability) அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். எங்கள் 20 சதவீத உற்பத்தி பசுமை மின்னாற்றலில் நடக்கிறது. அமெரிக்காவில் பசுமை மின்னாற்றல் மூலம் தயாரிக்கவில்லை என்றால் அப்பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் முறைகளை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கு ஏற்றார்போல் நாங்கள் தயாராகி வருகின்றோம்.
கேள்வி:- கட்டுமான பொருட்கள் உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி உள்ளது?
2021ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 ட்ரில்லியன் வந்தபோது, நாடு முழுவதும் உள்ள கான்கிரீட் கட்டுமான பொருட்கள் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் மொத்த வருவாய் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக இருந்தது. ஆனால் இது 2025ஆம் ஆண்டில் அது 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், எதிர்காலத்தில்150 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.
இனி உலக நாடுகள் இந்தியாவை சார்ந்துதான் இயங்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால், எங்கே அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி நடைபெறுகிறதோ, அங்குதான் விலையும் குறைவாக இருக்கும்.

டாபிக்ஸ்