Budget 2025: ‘தேர்தல் எதிரொலி! பிகாருக்கு அடித்தது ஜாக்பாட்!’ பட்ஜெட்டில் இத்தனை திட்டங்களா? அள்ளிக் கொடுத்த நிர்மலா!
Budget 2025: பீகார் மாநிலத்தில் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது பெற்ற நெசவுக் கலைஞர் துலாரி தேவி பரிசளித்த மதுபானி ரக சேலையை பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருந்தார்.

இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
பீகார் மாநிலத்தில் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது பெற்ற நெசவுக் கலைஞர் துலாரி தேவி பரிசளித்த மதுபானி ரக சேலையை பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்து இருந்தார்.
2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலையை அறிக்கையை அவர் வாசிக்கையில் பீகார் மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவோம். இது விவசாயிகளுக்கு மேம்பட்ட வருமானம், திறன் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பீகாரில் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்தவும், மாநிலத்தின் விவசாயப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை பெருக்கவும் ’மக்கானா வாரியம்’ அமைக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும் பீகார் தலைநகரில் உள்ள ஐஐடி பாட்னாவை விரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாட்னா விமான நிலையத்தை மேம்படுத்தவும் புதிய திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
