Budget 2024: புதிய வருமான வரியில் 75,000 வரி விலக்கு! மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனதா?
Budget 2024: இருப்பினும், பழைய வரி விதிப்பு முறையின் கீழ் விலக்கு ரூ.50,000 ஆக இருக்கும். நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய வரிவிதிப்பு கொள்கையின் கீழ் விலக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கும்.
கூட்டணி கட்சிகள் ஆதரவு உடன் மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது.
நிர்மலா சீதாராமன் உரை
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
9 முன்னுரிமைகள்
உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகிய ஒன்பது முன்னுரிமைகளை அடங்கியதாக இருக்கும் என அவர் கூறினார்.
விலைவாசி கட்டுக்குள் உள்ளது
நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி. 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் . அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது . 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வருமான வரி விலக்கு தொகை உயர்வு
இதில் புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு தொகையை ரூ.25,000 அதிகரிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் நிலையான விலக்கு தொகை ரூ 75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இது பொருந்தும்.
"புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, சம்பள ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ரூ .50,000-இல் இருந்து ரூ .75,000 ஆக உயர்த்தப்படும்" என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். முன்னதாக புதிய வரி விதிப்பு முறையில் நிலையான விலக்கை நிதியமைச்சர் ரூ .1 லட்சமாக உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், பழைய வரி விதிப்பு முறையின் கீழ் விலக்கு ரூ.50,000 ஆக இருக்கும். நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய வரிவிதிப்பு கொள்கையின் கீழ் விலக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கும்.
வருமான வரி விவரங்கள்
- 3,00,000 வரை: இல்லை
- 3,00,001 முதல் 7,00,000 வரை: 5%
- 7,00,001 முதல் 10,00,000 வரை: 10%
- 10,00,001 முதல் 12,00,000 வரை: 15%
- 12,00,001 முதல் 15,00,000 வரை: 20%
- 15,00,000க்கு மேல்: 30%
இதன் விளைவாக, புதிய வரி சலுகையை தேர்ந்தெடுப்பவர்கள் ரூ.17,500 சேமிக்க முடியும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். கூடுதலாக, நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதற்கும், வழக்குகளுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்கும் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பதற்கான திட்டங்களையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.
முந்தைய முயற்சிகளுக்கு ஏற்ப, தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கான வரி முறையை சீராக்குவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார். வரி விதிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளை எளிமைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். தனிநபர் வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் 2023-24 நிதியாண்டில் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
டாபிக்ஸ்