Bihar: 2 வயது சிறுவன் மீது கிரிமினல் வழக்கு! எதற்காக தெரியுமா?
கொரோனா கட்டுப்பாட்டை மீறியதாக இரண்டு வயது சிறுவன் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சிறுவனுக்கு ஜாமின் கோரி அவரது தாயார் நீதிமன்றத்தை நாடினார்.
பிகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் கொரோனா தெற்று பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதாக இரண்டு வயது சிறுவன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுவன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 2021ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய் தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேறாமல் இருக்கும் விதமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து பிகார் மாநிலம் பெருசராய் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், சில இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதைத்தொடர்ந்து தடுப்பு வேலியை உடைத்த சிலர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியுள்ளனர். இதில் உடைக்கப்பட்ட வேலியை இரண்டு வயது ஆண் குழந்தை தாண்டியதாக கூறப்படுகிறது.
இந்த வேலியை உடைத்த எட்டு பேர் மீது பெகுசராய் போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்த நிலையில், வேலியை தாண்டியதாக குழந்தை மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் அப்போது குழந்தையை ஆஜராகுாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது. தனது குழந்தை மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு அவரது தாயார் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு போலீசார் 2 ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தையின் தாயார் மாவட்ட நீதிமன்றத்தை நாடினார். அதில் தனது குழந்தை மீது பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்கை ரத்து செய்து ஜாமின் அளிக்குமாறு மனு தாக்கல் செய்தார்.
இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர் கண்டு வியந்து போனார். பின்னர் குழந்தைக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. இரண்டு வயது குழந்தை மீது வழக்குபதிவு செய்ய வாய்ப்பே கிடையாது. இந்த விவகாரத்தில் பெகுசராய் போலீசார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
எனவே குழந்தையின் பெயரை கிரிமினல் வழக்கிலிருந்து நீக்குமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அத்துடன் குழந்தை மற்றும் தாயாரை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.