Bangalore Bomb Blast: பெங்களூரு குண்டு வெடிப்பு.. சந்தேக நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு.. 5 பேர் கைது?
பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று நண்பகல் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய பெங்களூரு பகுதியில் இயங்கி வந்த பிரபலமான ஓட்டலில் குண்டுவெடிப்பு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் செயல்பட்டு வந்த ராமஸ்வர கபே ஹோட்டலில் நேற்று பிற்பகலில் குண்டு வெடிப்பு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதில் தொப்பி, கண்ணாடி, பேண்ட் சட்டை அணிந்து கையில் பையுடன் அந்த நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. அந்த நபர் பையை வைத்து விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை பிடித்து கார்நாடக காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 8 தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
முதல்வர் தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனை:
பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று நண்பகல் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தை யாரும் அரசியாலக்க வேண்டாம் என்று முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, ஓட்டலில் யாரோ ஒரு பையை வைத்திருந்தனர். அது வெடித்ததில் சிலர் காயமடைந்தனர். "நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறோம். இது ஒரு வெடிகுண்டு வெடிப்பு. இதை யார் செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். நிலைமையை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்" என்று சித்தராமையா கூறினார்.
இது சக்தி வாய்ந்த வெடிகுண்டு அல்ல, குண்டுவெடிப்புக்குப் பிறகு தனது முதல் எதிர்வினையில், அதில் அரசியல் வேண்டாம் என்றும் சித்தராமையா கூறி உள்ளார். மேலும் இந்த சாதனம் வாடிக்கையாளர் ஒருவரின் பையில் வைக்கப்பட்டிருந்ததை முதலமைச்சர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் கபேயில் பணிபுரியும் ஒரு பாதுகாவலர் கூறுகையில், "நான் கஃபேவுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். ஹோட்டலுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். திடீரென பலத்த சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டது, இதனால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் காயமடைந்தனர் என கூறி உள்ளார்.
பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பாஜக தலைவர் பி.சி.மோகன் கவலை தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு மத்திய தொகுதி பாஜக எம்.பி., பி.சி.மோகன் வெளியிட்டுள்ள பதிவில், "பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் மர்மமான குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கேள்விப்பட்டது கவலையளிக்கிறது. விசாரணை நடத்தி அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மேலும், பெங்களூரு தெற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ஒரு வாடிக்கையாளர் அதன் வளாகத்தில் ஒரு பையை விட்டுச் சென்றதால் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக கஃபே நிறுவனர் தன்னிடம் தெரிவித்தார். பெங்களூரு மக்கள் முதல்வர் சித்தராமையாவிடம் பதிலைக் கோருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்