தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Ashok Gehlot Confirms Congress President Poll Bid

Congress President Poll: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

Karthikeyan S HT Tamil
Sep 23, 2022 12:15 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடப்போவதாக இன்று அறிவித்துள்ளாா்.

அசோக் கெலாட்(ANI)
அசோக் கெலாட்(ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதன் பின்னர் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றாா். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா இருந்து வருகிறார்.

இந்தசூழலில் கட்சிக்கு முழு நேர தலைவரை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்புமனுவை அக்டோபர் 8ஆம் தேதிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக். 17ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்.19ல் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என முடிவுவெடுத்துள்ளேன். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிப்பேன். எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும் என்பது தான் நாட்டின் தற்போதைய நிலை. காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் நேரு குடும்பத்தினா் உறுதியாக உள்ளனர் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவதில்லை என அசோக் கெலாட் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராகப் போகிறார்.

இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பரில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், சோனியாவை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் வாயிலாக, 22 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா, ராகுல் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியான நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர், தேர்தலில் களமிறங்கலாம் என்று தெரிகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்