Asaduddin Owaisi: பில்கிஸ் பானு வழக்கு விவகாரம்- பிரதமர் மோடி மீது ஒவைஸி குற்றச்சாட்டு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Asaduddin Owaisi: பில்கிஸ் பானு வழக்கு விவகாரம்- பிரதமர் மோடி மீது ஒவைஸி குற்றச்சாட்டு

Asaduddin Owaisi: பில்கிஸ் பானு வழக்கு விவகாரம்- பிரதமர் மோடி மீது ஒவைஸி குற்றச்சாட்டு

Manigandan K T HT Tamil
Jan 08, 2024 04:19 PM IST

இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தி வதேராவும் பாஜகவை கடுமையாக சாடினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களிடம் பேசினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களிடம் பேசினார். (ANI)

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன், எதிர்காலத்தில் அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கும் எதிராக இது ஒரு முன்னுதாரணமாக செயல்படும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு அரசியல் சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறீர்கள் என்பதற்காக, நீங்கள் விடுவிக்கப்பட மாட்டீர்கள். நரேந்திர மோடி நாரி சக்தி பற்றி பேசும்போது, அது வெற்று கூற்று என்பது தெரிகிறது. அவர்கள் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். குஜராத் மற்றும் மத்திய பாஜக அரசாங்கம், அந்தக் குற்றவாளிகளை விடுவிக்க உதவின - அவர்கள் பில்கிஸ் பானுவிடம் பேச வேண்டும் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் அளித்ததையும் அசாதுதீன் ஓவைசி சுட்டிக்காட்டினார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணை நிற்பதற்கு பதிலாக, இந்த கொடூர குற்றத்தை செய்த குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கிறது என்று நான் முதல் நாளில் இருந்து கூறி வருகிறேன். பில்கிஸ் பானு தான் இவ்வளவு தைரியமாக போராடினார். அவரை பாதுகாக்க முடியாத அதே குஜராத் அரசு, குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது” என்றார் ஒவைஸி.

2002-ம் ஆண்டு மதக்கலவரத்தின் போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது பானுவுக்கு 21 வயது, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது கைக்குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒரு கும்பலால் கொல்லப்பட்டனர்.

பதினான்கு ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்ததாகவும், சிறைக்குள் அவர்களின் நடத்தை நன்றாக இருந்ததாகவும் கூறி குஜராத் அரசு கடந்த ஆண்டு 11 குற்றவாளிகளை விடுவித்தது.

இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிராவில் நடந்ததால் முடிவு எடுக்க குஜராத் அரசுக்கு தகுதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. குஜராத் அரசு அதிகாரத்தை அபகரித்துவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.

குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை அபகரித்து தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் சட்டத்தின் ஆட்சி மீறப்படுகிறது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ‘இறுதியில் நீதி வென்றுள்ளது’ என்றார்.

"இந்த உத்தரவின் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் பெண்களுக்கு எதிரான கொள்கைகள் குறித்த திரை அகற்றப்பட்டுள்ளது. இதன் பின்னர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். தைரியமாக தனது போராட்டத்தைத் தொடர்ந்த பில்கிஸ் பானுவுக்கு வாழ்த்துக்கள்" என்று ‘எக்ஸ்’-இல் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.