World Wetlands Day: 'இரக்கம் காட்டுங்கள்'.. உலக சதுப்பு நில தினம் வரலாறு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
World Wetlands Day 2024: உலக சதுப்பு நில தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 02 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முக்கியத்துவம் மற்றும் அதன் வரலாறு குறித்து அறிந்துகொள்வோம்.
ஈர நிலம் அல்லது சதுப்பு நிலங்கள் என்பவை தற்காலிகமாவோ அல்லது நிரந்தரமாகவோ தண்ணீரால் மூடப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளால் வகைப்படுத்தப்படுகின்றன. விலங்குகள் மற்றும் தாவர உயிர்களைக் கொண்ட அத்தகைய சுற்றுச்சூழல் அமைப்புகளில் நீர் முக்கிய கட்டுப்படுத்தும் காரணியாகும். இந்நிலங்கள் பூமியின் பச்சை நுரையீரல் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்ற நிலப்பகுதியை விட வேறுபட்டு நிற்கும். இது இருவகைப்படும். அவை கடலோர உப்புநீர் சதுப்பு நிலம், இன்னொன்று நன்னீர் சதுப்பு நிலம்.
ஆண்டு முழுவதும் நீர் நிற்கும் அல்லது 6 மாதங்கள் தாழ்ந்த நிலங்களில் இயற்கையாகவே நீர் நிற்கும் நீர் சார்ந்த நிலப்பகுதி. சதுப்பு நிலங்கள் மக்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக்கும், பூமிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பெரும்பாலும் இயற்கையாவோ அல்லது செயற்கையாகவோ நிலையான அல்லது பாயும் நீரோட்டம் கொண்டதாக இருக்கும். இவற்றுள் இயற்கையான ஈர நிலங்கள் என்பவை சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், இயற்கை நீர், குளங்கள், குட்டைகள், ஏரிகள் முதலானவை.
இத்தகைய ஈர நிலங்களை சேத்து நிலம், சக்தி நிலம் என பொது மக்கள் அழைக்கின்றனர். அந்தந்த நாடுகளில் அந்தந்தப் பகுதிகளுக்கு உகந்த இன்றியமையாத, கணக்கிலங்கா ஈர நிலங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, தென் அமெரிக்காவின் அமேசான் வடி நில பகுதி, ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரி, காங்கோ நதி முகத்துவார பகுதிகளிலும், ரஷ்யாவின் வோல்கா நதி பாயும் மத்திய சமவெளி பகுதிகளிலும் உள்ளன. இந்தியாவில் தமிழகம், குஜராத், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
ஈர நிலங்கள் பூமியில் 6 சதவிகிதம் மட்டுமே உள்ளன. ஆனால், நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான விலங்கு மற்றும் தாவர இனங்கள் ஈர நிலங்கள் எனப்படும் சதுப்பு நிலங்களில் வாழ்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன.
1971-ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி எஸ்கண்டர் பெரோஸ் தலைமையில் ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 18 நாடுகள் கலந்துகொண்ட கூட்டத்தில் உலகளாவிய ஈர நிலங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதை ராம்சார் ஒப்பந்தம் என்றும் அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளான பிப்ரவரி 2 ஆம் தேதி தான் உலக சதுப்பு நிலங்கள் தினமாக (ஈர நிலங்கள் தினம்) கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், மனித உயிர்களுக்கும் கிரகத்திற்கும் ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சதுப்பு நில தினம் அனுசரிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுப்பு நிலத்தின் முக்கியத்தும் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் உலக சதுப்பு நில தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி, சதுப்பு நிலங்களை பாதுகாத்து பூமியை குளிரூட்டி நம்முடைய இரக்கத்தை அதன் மீது காட்டுவோம்..!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9