Sony: சோனியை தெரியும் அகியோ மொரிட்டாவை தெரியுமா? ரைஸ் குக்கர் நிறுவனம் உலகின் காதுகளை வளைத்த கதை!
”அகியோ மொரிட்டா மறைந்தபோது அவரின் சொத்து மதிப்பு 1300 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. உலகப்பணக்காரர்கள் வரிசையில் அவருக்கு 385ஆவது இடம் கிடைத்தது.”

உலகின் மிகச் சிறந்த மற்றும் புதுமையான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சோனி கார்ப்பரேஷனின் கதை, அதன் இணை நிறுவனரான மொரிட்டா அகியோவின் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதது. அகியோ மொரிட்டா ஒரு தொலைநோக்கு தொழில்முனைவோராக இருந்த அவரின் செயல்பாடு மின்னணுவியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
அகியோ மொரிட்டா ஜனவரி 26, 1921 அன்று ஜப்பானின் நகோயாவில் பிறந்தார். அவரது குடும்பத்தினர் மதுபானம் தயாரிப்பவர்களாக இருந்தனர். ஒசாகா இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார். இரண்டாம் உலகப் போரில் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார். போர் அவரது வாழ்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது எதிர்கால வணிக கூட்டாளியான மசாரு இபுகாவை சந்திக்கும் வாய்ப்பையும் அது அளித்தது.
சோனியை நிறுவுதல்
1946 ஆம் ஆண்டில், மொரிட்டாவும் இபுகாவும் இணைந்து டோக்கியோ சுஷின் கோக்யோ கே.கே என்ற நிறுவனத்தை தொடங்கினர். அது பின்னர் சோனி கார்ப்பரேஷன் ஆனது. டோக்கியோவில் வெடிகுண்டு வீசப்பட்ட டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வெறும் 500 டாலர் மூலதனத்தை கொண்டு இருவரும் தங்கள் தொழில்களை தொடங்கினர்.