BJP MP: கெளதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகல்!
ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா, தன்னை நேரடி தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி.யுமான கெளதம் கம்பீர், அரசியல் பணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் வலியுறுத்தி இருந்தார். எதிர்காலத்தில், கிரிக்கெட் தொடர்பான பணிகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ள கம்பீர் தீட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கம்பீர் தனது எக்ஸ் தளத்தில், "எதிர்காலத்தில் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, என்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்." என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி ஜெயந்த் சின்ஹா, தன்னை நேரடி தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், நேரடி தேர்தல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.