தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Aap's Atishi: “டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி”.. ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு!

AAP's Atishi: “டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி”.. ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு!

Karthikeyan S HT Tamil
Apr 12, 2024 01:55 PM IST

Aam Aadmi Party: டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி.
ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி. (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக தலைமையிலான மத்திய அரசு அடுத்த சில நாட்களில் தேசிய தலைநகரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடும் என்று டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான அதிஷி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார். ஜனாதிபதியின் ஆட்சியை திணிப்பது "சட்டவிரோதமானது" மற்றும் "மக்களின் ஆணைக்கு எதிரானது" என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, "அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அவரது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அரசியல் சதி. வரவிருக்கும் நாட்களில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் என்னிடம் கூறுகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பாஜகவை தோற்கடித்தது. அதனால்தான் அவர்கள் டெல்லி அரசை கவிழ்க்க விரும்புகிறார்கள்." என்று தெரிவித்தார்.

மேலும், தேசிய தலைநகரில் ஜனாதிபதியின் ஆட்சியை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டும் பல நிகழ்வுகள் சமீபத்திய காலங்களில் நடந்துள்ளன என்றும் அதிஷி கூறினார்.

கடந்த சில மாதங்களாக டெல்லியில் எந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. துறைகளில் பணியிடங்கள் காலியாக இருந்தாலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி, அமைச்சர்கள் கூட்டிய கூட்டங்களுக்கு அதிகாரிகள் வருவதை நிறுத்திவிட்டனர். டெல்லி அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து துணை நிலை ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதங்களை எழுதி வருகிறார், "என்றும் அவர் கூறினார்.

பாஜக மறுப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பேசிய டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சத்தேவா, " சட்டமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களைக் கொண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த பயம் ஆட்டிப்படைப்பது ஆச்சர்யமாக உள்ளது. அதிஷி கற்பனை மற்றும் அற்பமான கதைகளை விதைப்பதில் நிபுணர். 60 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் தங்களை விட்டு விலகி விடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் (ஆம் ஆத்மி) இருக்கிறார்கள். அப்படியானால், அது அவர்களின் பயம், அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்து, புதிய முதல்வரிடம் ஆட்சியை ஒப்படைத்து, டெல்லி நிர்வாகம் ஒழுங்காக இயங்க அனுமதிப்பது நல்லது.” என்றும் விரேந்திர சத்தேவா மேலும் கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது முதல் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். தற்போது கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்