Tiger: கேரள - கர்நாடக எல்லையில் பெண்மணியைக் கொன்ற புலி.. மக்களால் முற்றுகையிடப்பட்ட அமைச்சர்.. 2 நாட்களுக்கு ஊரடங்கு!
Tiger: கேரள - கர்நாடக எல்லையில் பெண்மணியைக் கொன்ற புலி.. மக்களால் முற்றுகையிடப்பட்ட அமைச்சர்.. 2 நாட்களுக்கு ஊரடங்கு!

மைசூரு: கர்நாடகா மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் மனிதனைக் கொல்லும் புலிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வனத்துறை ஊழியரின் மனைவியைக் கொன்று அவரது உடலின் பாகத்தை புலி சாப்பிட்டிருக்கிறது. புலியைப் பிடிக்கச் சென்ற அதிரடிப்படை வீரர்களையும் புலி தாக்கியிருக்கிறது. புலி அச்சுறுத்தல் காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புலியைக் கொல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள மனந்தவாடி நகர்ப்பகுதி மக்கள் இப்பகுதியில் வனவிலங்குகளின் அச்சுறுத்தலைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதுவும் கேரள வனத்துறை அமைச்சரின் காரை முற்றுகையிட்டு இந்தப் போராட்டத்தை செய்துள்ளனர். இதன் காரணமாக, மானந்தவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜனவரி 27ஆம் தேதியான திங்கள்கிழமையான இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கர்நாடகாவின் மைசூரு, சாம்ராஜ்நகர் மற்றும் குடகு மாவட்டங்களை ஒட்டியுள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக புலி பீதி நிலவி வருகிறது. கர்நாடகாவின் மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டே தாலுகாவில் நாகரஹோளே தேசிய பூங்காவை ஒட்டியுள்ள மானந்தவாடி கிராமத்திற்கு அருகே புலி தாக்கியதில் வனத்துறை ஊழியரின் மனைவி ராதா உயிரிழந்தார்.
பூச்சம்பள்ளியின் பிரியதர்ஷினி எஸ்டேட் பகுதியில் காபி பறித்துக் கொண்டிருந்தபோது ராதா என்னும் பெண்மணி புலியால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரின் உடலின் ஒரு பகுதியையும் புலி தின்றுள்ளது. எஞ்சிய உடல் பகுதி எஸ்டேட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்மணியைக் கொன்ற புலியால் ஆத்திரமடைந்த மக்கள்:
ராதாவின் மரணச் செய்தியை அறிந்த மானந்தவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் நடக்கும் இந்த ஆட்கொல்லி புலி மற்றும் காட்டு யானையின் தொல்லையால் அப்பகுதி மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
வனத்துறையின் புலிகள் பணிக்குழுவின் சிறப்புக் குழு ஏற்கனவே ஜனவரி 26ஆம் தேதி, புலி பிடிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதில் ஒருவரை புலி தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் புலிகளின் தொல்லை மேலும் அதிகரித்துள்ளது.
கேரள வனத்துறை அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்:
இதற்கிடையில், கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். புலி வனத்துறை ஊழியரின் மனைவியைக் கொன்று மற்றொரு ஊழியரை தாக்கியது தெரியவந்ததால் அதை கொல்லவும் வனத்துறை ஊழியர்களுக்கு கேரள அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அது ஆட்கொல்லி புலி என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், திருப்தியடையாத அப்பகுதி மக்கள், கேரள வனத்துறை மக்களின் நலனை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டி வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும், இன்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.
விதிக்கப்பட்ட ஊரடங்கு:
இதன் காரணமாக, உள்ளூர் நிர்வாகம் ஜனவரி 27ஆம் தேதியான இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மானந்தவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்துள்ளது. இந்த பகுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த மக்கள் வசிப்பதோடு, சுற்றுலாப் பயணிகள் இந்த வழியில் வயநாடு நோக்கிச் செல்வதிலும் தடை ஏற்படலாம்.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் இயல்பான நடமாட்டம் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய சேவைகள் இருக்கும். தடை உத்தரவுகள் நடைமுறையில் இருப்பதால் பெரிய கூட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஒருவரின் உடல் கண்டெடுப்பு:
இதற்கிடையில், உயிரிழந்த ஒருவரின் உடல் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. கேரள வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால், இப்போது தாக்கியது புலியா அல்லது வேறு ஏதாவதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவின் நாகரஹோளே மற்றும் பந்திப்பூர், கேரளாவின் வயநாடு மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை ஆகியவை புலிகள் காப்பகத்தை ஒட்டியே உள்ளன. வயதான புலிகள் காட்டை விட்டு வெளியே வந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் புலி தாக்கியபோது, அதை எங்கு கண்டாலும் கொல்ல உத்தரவிடப்பட்டது. கர்நாடக எல்லையிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்