தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fake Doctors Arrest: போலி மருத்துவர்கள் 28 பேர் கைது!

Fake Doctors Arrest: போலி மருத்துவர்கள் 28 பேர் கைது!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 09, 2023 11:18 AM IST

Trichy: புதுக்கோட்டை 4 பேரும், பெரம்பலூர் 3 பேரும், அரியலூர் 4பேரும், தஞ்சாவூர் 5 பேரும், திருவாரூர் 10 பேரும், நாகப்பட்டிணம் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி மருத்துவர்கள் கைது
போலி மருத்துவர்கள் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்களை களையெடுக்கும் சோதனையில் 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறையினர், மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து கடந்த 01.04.2023 முதல் நடத்திய அதிரடி சோதனையில், முறையாக மருத்துவப் பட்டயப் படிப்பு படிக்காமலும், போலி உரிமம் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 28 போலிமருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.  புதுக்கோட்டை 4 பேரும், பெரம்பலூர் 3 பேரும், அரியலூர் 4பேரும், தஞ்சாவூர் 5 பேரும், திருவாரூர் 10 பேரும், நாகப்பட்டிணம் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து பொது மக்களின் நன்மையை கருதி மேலும் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்படும் என்றும், பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். அதேபோல் `பாராமெடிக்கல்' என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போலி மருத்துவம் ஆகும்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதேபோல் மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோ மியோபதி போன்ற துறைகளில் படித்துப் பட்டம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பதும்கூட போலி மருத்தும்தான். இவர்களுக்கு அலோபதி முறை மருத்துவம் பற்றித் தெரியாது. அதுபோல, அலோபதி மருத்துவர்கள் மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதும்கூட குற்றமே. காரணம், அலோபதி மருத்துவர்களுக்கு மாற்றுமுறை மருத்துவம், அதுபற்றிய மருந்து அறிவியல் தெரியாது. 

இவைதவிர அலோபதி மற்றும் மாற்று மருத்துவமுறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்துச் சான்றிதழ் (சர்டிஃபிகேட் கோர்ஸ்) பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பதும் போலி மருத்துவமே. இதே போல் எம்.பி.பி.எஸ் முடிக்காமலே எம்.டி படிக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. அலோபதி மருத்துவப் பட்டமான எம்.பி.பி.எஸ் பெற்ற மருத்துவர்கள்கூட தன் பெயருக்குப் பின், தேர்ச்சி பெறாத அல்லது மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் இல்லாத டிகிரிகளைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் போலி மருத்துவமே, இதுவும் குற்றமே.

இன்றையசூழலில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகம் உள்ளது வருந்தத்தக்க காரியம். இது விலை மதிப்பற்ற மனித உயிரிகளுடன் விபரீதம் ஆகும்.

இதனால் தான் பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்டறிய தமிழக அரசு பல நடவடிக்கைகளை முடுக்கி உள்ளது. இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.