Palak Bun Dosai : பாலக் பூரி சாப்பிட்டு இருப்பீர்கள்; பாலக் பன் தோசை சாப்பிட்டு இருக்கிறீர்களா? இதோ ரெசிபி!
பாலக் பன் தோசை செய்வது எப்படி?

பாலக்கீரையில் கடையல், மசியல் தவிர, நீங்கள் பூரியில் சேர்த்து செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதில் பன் தோசை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? அது செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை – ஒரு கட்டு
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
ரவை – ஒரு கப்
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
பேக்கிங் சோடா – சிட்டிகையளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும். அதனுடன் மல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் ரவை மற்றும் தயிர் கலந்து அரைத்து உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதை அரைத்த மாவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். இறுதியாக பேக்கிங் சோடா சேர்த்து மொத்தமாக பன் தோசைகளாக ஊற்றிக்கொள்ளவேணடும்.
ரவை மற்றும் தயிரை தவிர்த்துவிட்டு, நேரடியாக தோசை மாவில் பாலக்கீரை கலவையை சேர்த்து கரைத்தும் தோசைகளாக ஊற்றி எடுக்கலாம். பன் தோசை செய்யும்போது தாளிப்பு கரண்டி அல்லது ஆப்ப சட்டியில் சிறிய பந்துபோல் ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு நன்கு பொன்னிறாகும் வரை வைத்திருந்து எடுக்கவேண்டும்.
வெறும் தோசையாக ஊற்ற நினைத்தால் பேக்கிங் சோடா கலக்க தேவையில்லை. நேரடியாக தோசைக்கல்லில் சேர்த்து தோசைகளாக வார்த்து எடுத்துக்கொள்ளலாம். இதற்கு தொட்டுக்கொள்ள எந்த சட்னி மற்றும் சாம்பார் நன்றாக இருக்கும்.
உங்கள் வீட்டில் கீரையை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுத்தால் அவர்களும் கீரை சாப்பிட்டதுபோல் ஆகிவிடும். அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். இட்லி, தோசை மாவு இல்லாவிட்டாலும் டிஃபன் என்ன செய்வது என்ற குழப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்தாமல் ஆபத்பாந்தவனாக இந்த மாவு உங்களுக்கு கைகொடுக்கும்.
பாலக்கீரையின் நன்மைகள்
பாலக்கீரையில் பெண்களுக்குத் தேவையான இரும்புச்சத்துக்கள் உள்ளது. இரும்புச்சத்துக்கள் உங்களுக்கு அனீமியாவைத் தடுக்க உதவுகிறது. இது உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கின்றன. 100 கிராம் பாலக்கீரையில் 2.7 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. 165 மில்லிகிராம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 99 மில்லிகிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. 9 மில்லிகிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. 482 மில்லி கிராம் வைட்டமின் கே சத்துக்கள் உள்ளது. ஒரு நாளைக்கு தேவையான அளவு வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. 100 கிராம் பாலக்கீரையில் 28.1 மில்லிகிராம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. 10 மில்லிகிராம் லியூட்டின் உள்ளது. 558 மில்லிகிராம் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. 0.9 மில்லிகிராம் மாங்கனீஸ் சத்துக்கள் உள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்