World Zoonoses Day 2024 : விலங்குவழிப்பரவும் நோய்கள் தின வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
World Zoonoses Day 2024 : விலங்குவழிப்பரவும் நோய்கள் தின வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன தெரிந்துகொள்ளவேண்டிய நேரம் இது. ஏன் தெரியுமா ?

விலங்குகளினால் பரவக்கூடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் விலங்கு வழிப்பரவும் நோய்கள் தினம். விலங்குகளிடம் இருந்து மக்களுக்கு எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்ற நோய்கள் முதல் கொரோனா வரை பரவுகிறது. இவை உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை.
ஒரு வழியாக அவை மனிதர்களின் உடலுக்குள் புகுந்துவிட்டால், ஒன்று அவை ஜெயிக்கிறதா அல்லது மனிதர்கள் ஜெயிக்கிறார்கள் என்பதில்தான் அதன் வாழ்வும், சாவும், மனிதர்களின் வாழ்வும் சாவும் அடங்கியுள்ளது.
எனவே விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்களை தடுக்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளின் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்வோம்.
ஒவ்வொரு ஆண்டும், விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக விலங்கு வழிப்பரவும் நோய்கள் தினம் ஜூலை 6ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நோய்கள் பொது சுகாதாரம், விலங்குகள் நலம் மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த நாள் விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள், அதுகுறித்த ஆராய்ச்சிகள், தடுப்பு மற்றும் இவற்றை கையாள்வதற்காக ஒன்றினையவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
கருப்பொருள்
உலக விலங்கு வழிப்பரவும் நோய்கள் தினத்தின் கருப்பொருளாக, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றை களைவது குறித்து ஏற்கனவே உள்ள இணைவுகளின் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டுவதும் ஆகும். இந்த நாள் நோய் தடுப்பு மற்றும் இந்த முயற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
பிரெஞ்சு உயிரியல் நிபுணர், லூயிஸ் பாஸ்டர் வெற்றிகரமாக சிறுவன் ஜோசப் மெய்ஸ்டருக்கு ரேபிஸ் தடுப்பூசியைப் போட்டு செய்த நாளை கொண்டாடும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1885ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 6ம்தேதி) இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த சாதனை மருத்துவ அறிவியல் மற்றும் பொது சுகாதாரத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. தடுப்பூசிகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் விலங்கியல் நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து எடுத்துக்காட்டுவதாக இந்த நாள் உள்ளது.
20ம் நூற்றாண்டு முதல் உலக விலங்குவழிப்பரவும் நோய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் மூலம் பரவும் நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள் மற்றும் இந்தப்பரவலை குறைக்கும் வகையில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு கற்பிப்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
கடந்த காலங்களில் இந்த நாள், உலகம் முழுவதும் அறிவைப் பகிர்தல், ஆராய்ச்சிகளை அதிகரித்தல் மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
முக்கியத்துவம்
விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள் 60 முதல் 75 சதவீதம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ரேபிஸ், லைமே நோய், எபோலா, சார்ஸ், கோவிட் என அது தொடர்கிறது. இவை பொது சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தையே பாதிக்கின்றன.
விழிப்புணர்வு
உலக விலங்கு வழிப்பரவும் நோய்கள் தினம், விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்த ஆபத்துக்கள் மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. எனவே சுகாதாரம், விலங்குகளை கையாளும்போது பாதுகாப்புடன் இருப்பது மற்றும் தடுப்பூசி அவசியம். விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்களை தடுப்பது மற்றும் ஆபத்துக்களை குறைப்பது எப்படி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.
ஒரே சுகாதாரம்
ஒரே சுகாதாரம் என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் இவற்றின் ஆரோக்கியம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே சுகாதாரம், விலங்கு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொதுக்கொள்கைகள் என இவற்றை ஒன்றுபடுத்தி திட்டங்கள் வகுப்பது, இதனால் முன்னரே கண்டுபிடித்து, தடுத்து கட்டுப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கவும் முயல்வது.
ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும்
விலங்கு நோய்களை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றிற்கான சிறப்பான சிகிச்சைகளை மேற்கொள்வதில் ஆராய்ச்சிகள் முக்கிய பங்குவகிக்கின்றன. எனவே இந்த நாள் அரசுகள், மையங்கள் மறறும் தனியார் என அனைவரும் ஆராய்ச்சிகளில் முதலீடு செய்ய வலியுறுத்துகிறது. ஒன்றினைந்த ஆராய்ச்சி என்பது நோய் தடுக்க உதவும்.
உலக சுகாதாரம்
விலங்குகள் மூலம் பரவும் நோய்களுக்கு எல்லைகள் கிடையாது. எனவே உலகம் முழுவதும் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பையும் இந்த நாள் கோடிட்டு காட்டுகிறது. சர்வதேச உறவை வலுப்படுத்துவது, தகவல்கள் பரிமாறிக்கொள்வது, உலக சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துவது, தயாராக இருத்தல், தடுப்பு நடவடிக்கைகள் என ஒன்றிணைந்து உலக அளவில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த நாம் பாடுபடவேண்டும்.
விழிப்புணர்வு, ஆராய்ச்சி, ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைவது, இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பது என்பதே இந்த நாளின் அடிநாதமாக உள்ளது.

டாபிக்ஸ்