World Idli Day 2024: ‘தினமும் சாப்பிடும் மிருதுவான இட்லியில் இத்தனை விஷயம் இருக்கா’ உலக இட்லி தினம் இன்று!
World Idli Day 2024: உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு. இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக்.

World Idli Day 2024: குழந்தை முதல் பெரியவர்களை அனைவருக்கும் செரிமானத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு இட்லி. பொதுவாக இட்லியையும் நம் வாழ்க்கையும் பிரித்துப்பார்க்கவே முடியாது என்ற அளவிற்கு இட்லி நம்மோடு பின்னி பிணைந்துள்ளது. பொதுவாக காய்ச்சல் உள்ளிட்ட பல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவாக இட்லி உள்ளது.
அதுமட்டும் அல்ல இட்லியும் சாம்பாரும் ஒரு சரி விகித உணவு என்றே பார்க்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இட்லிக்கு ஒரு தினம் உள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? இன்று இட்லி தினம். இந்த நாளில் இட்லியின் வரலாறு, இட்லியை எவ்வாறு தயாரிப்பது என்று அறிந்து கொள்வோம்.
இட்லி தின வரலாறு
உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதால், இது இந்தியாவின் உணவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு. கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில், `இட்டாரிகா’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள்.
அதேசமயம் சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி புழக்கத்தில் உள்ளது.
இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக் என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் ஆட்டோ டிரைவராக இருந்த இனியவன் அப்போது இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து, இனியன் இட்லி தொழிலைக் கற்றுக் கொண்டார். அதன் முயற்சியாக கடந்த 2013-ல், 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார். தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். இதையடுத்து மார்ச் 30ந் தேதி உலக இட்லி தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
இட்லி தயாரிக்கும் முறை
முதலில் இட்லி அரிசி நான்கு முதல் நான்கரை மணி நேரமும், உளுந்து இரண்டு முதல் இரண்டரை மணி நேரமும் ஊற வைத்தால் போதுமானது.
இரண்டையும் ஒன்றாக சேர்த்தோ அல்லது ஒரே நேர அளவிலோ ஊற வைக்கக்கூடவே கூடாது.
இட்லி அரிசி & உளுந்து இரண்டையுமே நன்கு அலசிக் கழுவி விட்டு தான் பிறகு ஊற வைக்கவேண்டும்.
வெந்தயத்தை அரிசி அல்லது உளுந்து இரண்டுடனும் ஊற வைக்கலாம். முதல் நாளே வெந்தயத்தை தனியே ஊற வைத்து சேர்த்தால் எந்த அரிசியிலும் இட்லி மென்மையாக வரும்.
இட்லி அரிசியை கொஞ்சம் நரநரப்பாகவும், உளுந்தை களி போல மென்மையாகவும் குழைவாகவும் அரைப்பது முக்கியம்.
அரைபடும் உளுந்து ஒரு போதும் சூடேறக்கூடாது! எனவே அதை கிரைண்டரில் அரைக்கவும், தேவைக்கு சிறிது சிறிதாக நீர் சேர்த்து அரைக்கவும்.
கிரைண்டரில் ஆட்டும் போது நாம் சேர்க்கும் நீர்.. குளிர்ந்த பானை நீராக இருந்தால் மாவு சூடாவது தடுக்கப்படும். ஐஸ் வாட்டரும் சேர்க்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள நேரக் கணக்கில் ஊற வைத்து அரைத்த இரண்டு மாவுகளையும் ஒன்றாக்கி தேவையான உப்பு சேர்த்து கரைத்து 8 - 10 மணி நேரங்கள் புளிக்க வைத்து பயன்படுத்துவே சிறந்த முறையாகும். இப்படி செய்தால் இட்லி மிருதுவாக வரும்
இட்லியின் நன்மைகள்
இட்லியில் நொதித்தல் செயல்முறை நடைபெறுவதால் இது புரோபயாடிக்குகளின் நல்ல மூலமாகும். இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் செரிமானம் எளிதாக நடக்க உதவும். உடல் எடை குறைப்பில் இருப்பவர்களுக்கு இட்லி சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்கவும், இடைப்பட்ட உணவின் பசியை குறைக்கவும் உதவுகிறது. சிறு குழந்தைகளுக்கு இட்லி ஒரு சிறந்த உணவு என பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்பறம் என்ன போய் நாமும் இரண்டு இட்லி சாப்பிடலாமா?
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்